நமீதா எடுக்கும் புதிய முயற்சி... கை கொடுக்குமா?
நடிகை நமீதாவின் புதிய இயக்குனர்கள் மற்றும் சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் விதமாக, 'தியேட்டர்' என்கிற ஓடிடி தளத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தின் மூலம் 2004 ஆண்டு அறிமுகமானவர் நடிகை நமீதா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்த இவர் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர்.
பல படங்களில் கவர்ச்சிக்கு தடை போடாமல் தாராளம் காட்டி வந்த நமீதா, திடீர் என உடல் பருமல் அதிகரித்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஊதினார்.
இதனால் இவருக்கு பட வாய்புகள் குறைந்தது, சின்னத்திரை நிகழ்சிகளில் மட்டுமே இவரை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டு நடிகர் மோகன் லால் நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்பெற்ற 'புலி முருகன்' படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு விளையாடினார்.
ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு இருந்த போதிலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார் .
பின்னர் திடீர் என தன்னுடைய திருமணம் அறிவிப்பை வெளியிட்ட இவர், தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீராவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
திருமணத்திற்கு பின்பும், ஒரு சில படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் அதிமுக கட்சியில் இருந்து ஜெயலலிதா மறைவிற்கு பின் விலகிய நமீதா, பின்னர் பாஜக கட்சியில் இணைந்தார்.
சமீபத்தில் நடந்து முடித்த சட்டமன்ற தேர்தலில், பாஜக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தொடர்ந்து திரைப்படங்கள் ஓடிடி தலத்தில் வெளியாகி வரும் நிலையில், நமீதா புதிய ஓடிடி தளத்தை துவங்கியுள்ளார். இந்த தளம், புதிய இயக்குனர்கள், மற்றும் சிறிய பட தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிட நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். நமீதாவின் இந்த புதிய முயற்சிக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இவரது முயற்சி எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.