Censor Certificate: திரைப்படம் எப்படி சென்சார் சான்றிதழ் பெறுகிறது? முழு Process இதுதான்!
Censor Certificate: ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பு எப்படி Censor Certificate பெறுகிறது? CBFC-யின் Film Certification Process, Examining Committee, Cuts, U, UA, A, S Certificate என முழு விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate)
ஒரு படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பாக, “Censor Certificate” பெற வேண்டும் என்பது சினிமா ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அந்தச் சான்றிதழ் எப்படி வழங்கப்படுகிறது? படத்தை யார் பார்க்கிறார்கள்? கட் சொல்லப்பட்டால் என்ன நடக்கும்? U, UA, A, S என்றால் என்ன? என்ற முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
ஆன்லைல் விண்ணப்பம்
நாம் ஆதார், ரேஷன், பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்று, திரைப்பட தயாரிப்பாளர்களும், CBFC (Central Board of Film Certification)-ன் e-Cinepramaan இணையதளம் மூலம் திரைப்படச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்து, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
CBFC விண்ணப்பத்தை பரிசோதிக்கும்
அவ்வாறு சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் திரைப்பட விவரங்கள் சரிபார்க்கப்படும். அனைத்தும் சரியாக இருந்தால், படத்தைப் பார்வையிடுவதற்கான Examining Committee (EC) அமைக்கப்படும். தற்போதைய விதிகளின்படி, விண்ணப்பப் பரிசீலனைக்கு 7 நாட்களும், Examining Committee அமைக்க 15 நாட்களும் என காலவரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக CBFC-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தை முழுமையாகப் பார்ப்பார்கள்
இதுதான் முக்கியமான கட்டம். Examining Committee குழுவினர் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்து, அதன் கதை, காட்சிகள், வசனங்கள் உள்ளிட்டவற்றை விதிமுறைகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்வார்கள்.
இதில், திரைப்படம் பொதுமக்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கம், பொது ஒழுங்கு மற்றும் ஒழுக்கம் பாதிக்கப்படுகிறதா? யாரையாவது அவதூறாக சித்தரிக்கிறதா? குற்றச் செயல்களைத் தூண்டும் வகையிலான காட்சிகள் அல்லது கருத்துகள் இடம்பெற்றுள்ளனவா? உள்ளிட்ட பல்வேறு சட்டரீதியான அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும்.
எந்த Certificate வழங்குவது?
படத்தை முழுமையாக பார்த்த பிறகு அதன் தன்மை மற்றும் உள்ளடக்கத்தைப் பொறுத்து U, UA 7+, UA 13+, UA 16+, A அல்லது S சான்றிதழ் வழங்கப்படும்.
- U (Universal): அனைத்து வயதினரும் பார்க்கக்கூடிய திரைப்படம்.
- UA (Parental Guidance): குழந்தைகள் பார்க்கலாம். ஆனால், அவர்களின் வயதுக்கு ஏற்றதா? என்பதை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கவனித்து முடிவு செய்ய வேண்டும்.
- A (Adult): 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் திரைப்படம்.
- S (Special): குறிப்பிட்ட தொழில் அல்லது நிபுணத்துவம் கொண்டவர்கள் போன்ற சிறப்புப் பிரிவினருக்காக மட்டுமே திரையிடப்படும் திரைப்படம்.
Cut அல்லது மாற்றம் கேட்கப்பட்டால்?
திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் அல்லது வசனங்களை மாற்றவோ, நீக்கவோ CBFC அறிவுறுத்தலாம். அதன்படி, தயாரிப்பாளர் தேவையான மாற்றங்களைச் செய்து, திருத்தப்பட்ட திரைப்படத்தை மீண்டும் CBFC-க்கு சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் முறையாகச் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் CBFC அதிகாரிகள் சரிபார்ப்பார்கள்.
Certificate கைக்கு வரும்!
அனைத்து ஆய்வுகள் மற்றும் தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு, CBFC திரைப்படத்திற்கு ஒப்புதல் வழங்கும். அதன் பின்னர், படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படும். அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள காலவரம்புகளைப் பார்க்கும்போது, வழக்கமான செயல்முறை முழுவதும் முடிவதற்கு அதிகபட்சமாக 48 நாட்கள் வரை ஆகலாம்.
இறுதி முடிவு
Censor என்பது திரைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு உடனடியாக Certificate வழங்கும் நடைமுறை அல்ல. முதலில் விண்ணப்பம் பெறப்பட்டு, திரைப்படம் பரிசோதிக்கப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட குழுவினர் படத்தை ஆய்வு செய்து, அதற்கான Certificate வகை நிர்ணயிக்கப்படும்.
தேவையெனில் குறிப்பிட்ட காட்சிகள் அல்லது வசனங்களில் Cut அல்லது மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்படலாம். அந்த மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு, திரைப்படம் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக Certificate வழங்கப்படும். இவ்வாறு பல்வேறு கட்டங்களை கடந்து ஒரு திரைப்படம் திரையரங்குப் பயணத்தைத் தொடங்குகிறது.
குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து கருத்துகளும் CBFC – திரைப்படச் சான்றளிப்பு நடைமுறை (CBFC – Film Certification Process), CBFC – சட்டம் மற்றும் விதிகள் (CBFC – Act & Rules) ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

