கேஜிஎஃப் 2 மற்றும் புஷ்பா 2 சாதனைகளை சல்லி சல்லியாய் நொறுக்கிய காந்தாரா சாப்டர் 1..!
ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் அள்ளிய டிரெய்லர் பட்டியலில் கேஜிஎஃப் 2 மற்றும் புஷ்பா 2 சாதனைகளை முறியடித்து மாஸ் காட்டி இருக்கிறது ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்.

Most Viewed Trailer in 24 hours
சினிமாவில் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால், அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் டிரெய்லர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. டிரெய்லர்களை வைத்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்யலாம். டிரெய்லர்கள் படத்தின் ஓப்பனிங்கிற்கும் முக்கிய பங்காற்றுகின்றன. டிரெய்லர் நன்றாக இருந்தால் படத்தின் மீதான ஹைப் அதிகரிப்பதோடு, முதல்நாளே அப்படத்தை பார்க்க தூண்டும். அதனால் டிரெய்லரை எப்படியாவது நன்றாக கொடுக்க ஒவ்வொரு படக்குழுவும் மெனக்கெடுகின்றனர். அந்த வகையில் லேட்டஸ்டாக டிரெய்லர் வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ள படம் தான் காந்தாரா சாப்டர் 1.
காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான காந்தாரா படத்தின் தொடர்ச்சியாகும். இப்படத்தை ஹோம்பாலே நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படங்களில் ஒன்றாக காந்தாரா சாப்டர் 1 திரைப்படமும் உள்ளது. இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அந்த டிரெய்லருக்கு அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர்
இந்த நிலையில், காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர் யூடியூப்பில் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் எவ்வளவு வியூஸ் அள்ளி இருக்கிறது என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி காந்தாரா சாப்டர் 1 திரைப்பட டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 107 மில்லியன் வியூஸ் அள்ளி இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது ஒரே நாளில் 10 கோடியே 70 லட்சம் பார்வைகளை காந்தாரா சாப்டர் 1 டிரெய்லர் பெற்று சாதனை படைத்துள்ளதாம். அதுமட்டுமின்றி இந்த டிரெய்லருக்கு கடந்த 24 மணிநேரத்தில் 34 லட்சம் லைக்குகளும் கிடைத்திருக்கிறது.
கேஜிஎஃப் 2, புஷ்பா 2 சாதனை முறியடிப்பு
இதன்மூலம் யூடியூப்பில் ரிலீஸ் ஆன 24 மணிநேரத்தில் அதிக வியூஸ் அள்ளிய டிரெய்லர்கள் பட்டியலில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 113.2 மில்லியன் வியூஸ் உடன் சலார் முதலிடத்திலும், 106.5 மில்லியன் வியூஸ் உடன் கேஜிஎஃப் 2 மூன்றாம் இடத்திலும், 104.2 மில்லியன் பார்வைகளுடன் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் நான்காம் இடத்திலும், பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் டிரெய்லர் 74 மில்லியன் வியூஸ் உடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளது. கேஜிஎஃப் 2, புஷ்பா 2 போன்ற படங்களின் டிரெய்லர் சாதனைகளை காந்தாரா சாப்டர் 1 முறியடித்து உள்ளது.