- Home
- Cinema
- விஜய், அஜித் படங்களை ஓவர்டேக் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய பொன்னியின் செல்வன் 2
விஜய், அஜித் படங்களை ஓவர்டேக் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய மைல்கல்லை எட்டிய பொன்னியின் செல்வன் 2
மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விஜய் அஜித் படங்களை முந்தி புதிய சாதனை படைத்துள்ளது.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு திரைவடிவம் கொடுக்க, பல்வேறு ஜாம்பவான்கள் முயன்றனர். ஆனால் இறுதியாக, மணிரத்தினம் தான் தமிழ் சினிமாவின் கனவு படமாக இருந்த பொன்னியின் செல்வன் நினைவாக்கினார். அவரது கை வண்ணத்தில் இப்படம், இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆனது.
லைகா நிறுவனம் தான் இந்த பிரம்மாண்ட படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, வந்திய தேவனாக கார்த்தி, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருந்தது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 500 கோடி வசூலையும் வாரிக்குவித்தது. கடந்தாண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை குவித்த படம் என்கிற பெருமை பொன்னியின் செல்வன் பெற்றது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி அடைந்ததை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது.
பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்நிலையில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகி அதிக வசூல் குவித்த படங்கள் பட்டியலில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு போன்ற படங்களை முந்தி பொன்னியின் செல்வன் 2 முதலிடம் பிடித்துள்ளது.