வித்யாசாகரை கோபத்தில் கண்டபடி திட்டி யுகபாரதி எழுதிய பாட்டு - சூப்பர் ஹிட்டான கதை தெரியுமா?
Lyricist Yuga Bharathi vs Vidyasagar : இசையமைப்பாளர் வித்யாசாகரை திட்டி தான் எழுதிய பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதையை பாடலாசிரியர் யுகபாரதி கூறி இருக்கிறார்.
Yuga Bharathi, vidyasagar
வாலி, வைரமுத்து, நா முத்துக்குமார் வரிசையில் தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பாடலாசிரியர் யுகபாரதி. இவர் இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு தான் அதிக பாடல்கள் எழுதி இருக்கிறார். ஆனால் இவர்களின் முதல் சந்திப்பே சற்று எதிரும் புதிருமாக இருந்துள்ளது. இதனால் இசையமைப்பாளர் வித்யாசாகரை திட்டி யுகபாரதி பாடல் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி இருக்கிறது. அந்த கதையை யுகபாரதியே சொல்லி இருக்கிறார். அதைப்பற்றி பார்க்கலாம்.
லிங்குசாமி இயக்குனராக அறிமுகமான ஆனந்தம் படத்தில் யுகபாரதி எழுதிய பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அப்பாடல் வெற்றியடைந்ததை தொடர்ந்து லிங்குசாமியின் லக்கி சார்ம் ஆக மாறிய யுகபாரதியை தன்னுடையை அடுத்த படமான ரன் படத்திற்கும் பாடல் எழுத வைக்க அழைத்த லிங்குசாமி; அவரை வித்யாசாகரிடம் அழைத்து சென்றிருக்கிறார்.
அப்போது வித்யாசாகரை சந்திக்க தன்னுடைய கையில் இரண்டு புத்தகங்களையும் எடுத்து சென்றிருக்கிறார் யுகபாரதி. கம்பீரமாக அவர் முன் சென்று நின்ற யுக பாரதியை லிங்குசாமி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். உடனே மேலேயும் கீழேயும் பார்த்த வித்யாசாகரிடம் தன் கையில் இருந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறார் யுகபாரதி. அதை வாங்கி ஒரு பார்வை கூட பார்க்காமல் அருகில் தூக்கிபோட்டுவிட்டாராம் வித்யாசாகர். இதைப்பார்த்து யுகபாரதி முகம் சுருங்கிப்போனது.
Run Movie
பின்னர் என்ன பாடல் எழுதியிருக்கிறார் என வித்யாசாகர் கேட்க, பல்லாங்குழி பாடலை சொல்லி இருக்கிறார் லிங்குசாமி, உடனே பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்னு ஒரு பாட்டு இருக்கா என கேட்டிருக்கிறார் வித்யாசாகர். அந்த காலகட்டத்தில் டிரெண்டிங் சாங்காக அது இருந்த நிலையில், அதையே தெரியவில்லை என்று சொல்கிறாரே என அப்செட் ஆன யுகபாரதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கோபமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பின்னர் பல்லாங்குழி வட்டமாக இருக்கும் அதுஎப்படி ஒரு ரூபாய் உடன் பொறுத்திப் பார்க்க முடியும், உவமைக்கு கூட இது சரியா வராதே என வித்யாசாகர் சொல்ல, உடனே பதிலுக்கு நிலா முகம்னு எழுதுறாங்க, அப்போ நிலா மாதிரியா முகம் இருக்கும்; தாமரை முகம்னா தாமரை போன்று செதில் செதிலாவா மூஞ்சி இருக்கும் எல்லாம் ஒரு உவமைக்கு சொல்றது தான், என யுகபாரதி சொல்லி இருக்கிறார். இதனால் டென்ஷன் ஆன வித்யாசாகர் இந்த பையன் தான் பாட்டு எழுதனுமா என லிங்குசாமியிடம் கேட்டிருக்கிறார். அருகில் இருந்த யுகபாரதி, இவருக்கு நான் பாடல் எழுதுவது பிடிக்கல சார் அதான் இப்படி பேசுகிறார் என்று ஓப்பனாகவே சொல்லி இருக்கிறார்.
பின்னர் லிங்குசாமியிடம் என்ன சூழலுக்கு பாட்டு வேணும் என வித்யாசாகர் கேட்க, அதற்கு லிங்குசாமி, காதலன் காதலிக்கு கடிதம் கொடுப்பது போன்ற சூழல்ல பாட்டு வேண்டும் என கேட்டவுடன், இந்த பையன் எழுதுன லெட்டரை போய் கொடுக்க கூட தகுதி இல்லாதது மாதிரி இருக்கான். இவன் எப்படி லவ் லெட்டர் மாதிரி பாட்டு எழுதுவான் என கேட்டு யுகபாரதியை டேமேஜ் செய்திருக்கிறார் வித்யாசாகர்.
இதையும் படியுங்கள்... தலைமறைவான பாடகர் மனோ மகன்கள்; காரணம் என்ன?
Lyricist yuga bharathi
பயங்கர கோபத்தில் இருக்கும் யுக பாரதியிடம், பாடல் வரிகள் கடிதம் எழுதுவது போன்று இருக்கனும் ஆனால் அன்புள்ள என தொடங்கக்கூடாது என சொல்லி ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார் வித்யாசாகர். நாம்மை எழுதவிடக்கூடாது என்பதால் தான் இவர் இப்படி செய்கிறார் போல என நினைத்துக் கொண்டு நாளை பாடல் வரிகளை கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி இருக்கிறார் யுகபாரதி.
பின்னர் இரவு 10 மணிக்கு போன் பண்ணிய லிங்குசாமி, கோபித்துக் கொண்டு பாடல் எழுதாமல் விட்டுவிடாதீர்கள். அவர் என்னென்னவெல்லாம் சொன்னாரோ அதை யோசிச்சு எழுதுங்கனு சொல்லிருக்கார். உடனே இரவில் சித்தர் பாடல் ஒன்றை எடுத்து படித்திருக்கிறார் யுகபாரதி. அப்போது அந்த புத்தகத்தில் ‘பெண் எனும் மாயப்பிசாசு’ என்கிற வரி இடம்பெற்றதை பார்த்ததும் யுகபாரதிக்கு ஒரு ஐடியா கிடைத்திருக்கிறது.
Kadhal Pisase Song Secret
உடனே அந்த சித்தர் பாட்டில் கேட்ட வரியில் பெண்ணுக்கு பதில் காதலை சேர்த்து காதல் பிசாசே... காதல் பிசாசே என முதல் வரியை எழுதி இருக்கிறார் யுகபாரதி. பின்னர் தூங்கி எழுந்து மறுநாள் காலையில் யுகபாரதியை தஞ்சாவூரில் இருக்கும் அவரது நண்பர் போனில் அழைத்து எப்படி இருக்க என கேட்டதும் ஏதோ இருக்கேன்னு சொல்லி இருக்கிறார்.
பின்னர் அந்த நண்பர், நல்லாயிருக்கேன்; நல்லாயில்லனு சொல்லு அதென்ன ஏதோனு சொல்ற என கேட்க. அப்போது தோன்றிய பாடல் வரி தான் ‘ஏதோ செளக்கியம் பரவாயில்லை’ அதன்பின்னர் அடுத்து என்ன வரி எழுதுவது என தெரியவில்லை. அதனால் வித்யாசாகரை திட்டி எஞ்சியுள்ள பாடல் வரிகளை எழுதினேன். அது அவருக்கே தெரியும் என யுகபாரதி கூறி இருக்கிறார்.
vidyasagar
மறுநாள் எப்படியும் இந்த பாடல் வரியை வித்யாசாகர் ரிஜெக்ட் பண்ணிவிடுவார் என நினைத்துக் கொண்டே சென்று அவரிடம் பாடல் வரிகளை கொடுத்த யுகபாரதிக்கு காத்திருந்தது அதிர்ச்சி. காதல் பிசாசே... காதல் பிசாசே என தன் பாடல் வரிகளை படித்துவிட்டு, தூரத்தில் இருந்த யுகபாரதியை அருகில் அழைத்திருக்கிறார் வித்யாசாகர்.
நேற்று திட்டினார், இன்று அறைந்துவிடுவாரோ என பயத்தில் அருகில் சென்ற யுகபாரதியை கட்டிப்பிடித்து பாராட்டி, இனி நான் இசையமைக்கக் கூடிய எல்லாப் பாடலுக்கும் நீ பாட்டெழுதுவனு சொல்லியிருக்கிறார். இப்படி எதிரும் புதிருமாக தொடங்கிய வித்யாசாகர் - யுகபாரதி கூட்டணியில் மட்டும் 300 பாடல்கள் வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய், ரஜினியைவிட அதிக சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் தீபிகா படுகோனே; இத்தனை பிசினஸ் செய்கிறாரா?