- Home
- Cinema
- மன்னிப்பு கேட்க நாளை தான் கடைசி நாள்.! கமலுக்கு கெடு விதித்த திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம்
மன்னிப்பு கேட்க நாளை தான் கடைசி நாள்.! கமலுக்கு கெடு விதித்த திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம்
கமல்ஹாசனின் 'தக் லைஃப்' படத்தின் புரமோஷனில் அவர் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு. மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

5ஆம் தேதி வெளியாகிறது தக் லைஃப்
கமல்ஹாசன் நடிக்கும் புதிய படமான 'தக் லைஃப்' வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தக் லைஃப் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தக் லைஃப் திரைப்படத்தின் புரமோஷனின் போது தமிழில் இருந்து வந்தது கன்னடம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தை கர்நாடகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் கமலின் தக் லைஃப் திரைப்படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டது. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல்
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கத் தலைவர் கே.வி.சந்திரசேகர் கூறுகையில், "இது மொழி சார்ந்த விஷயம். வியாபாரத்தைத் தாண்டிய உணர்வுப்பூர்வமான விஷயம். எனவே எங்களுக்கு மொழியே முக்கியம். எங்கள் மொழியை இழிவுபடுத்தியவர்களுக்கு அவர்களின் தவறு என்னவென்று உணர்த்த வேண்டும். இதற்காக கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும். திங்கள் கிழமைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பிறகு மன்னிப்பு கேட்டாலும் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம்" என்றார்.
மன்னிப்பு மட்டுமே தீர்வு
கர்நாடக திரைப்பட வர்த்தக மன்றத் தலைவர் நரசிம்மலு கூறுகையில், "கமல்ஹாசனின் அறிக்கை இப்போது சினிமா பிரச்சனையோ கேள்வியோ அல்ல. ஒட்டுமொத்த கர்நாடக மக்களின் சுயமரியாதை சார்ந்த விஷயம். எனவே அவர் கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் நாங்கள் படத்தை வெளியிட மாட்டோம். விநியோகஸ்தர்களும் யாரும் முன்வரவில்லை. திரையரங்க உரிமையாளர்களும் இந்தப் படத்தை வெளியிடத் தயாராக இல்லை. இந்தப் பிரச்சனைக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பது மட்டுமே தீர்வு. அது திங்கள் கிழமைக்குள் நடக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் திரைப்படம் கடிதம் எழுதிய அமைச்சர்
ஏற்கனவே கமலின் பேச்சிற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையை எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் உமேஷ் பணக்கார் கூறுகையில், "இந்தப் பிரச்சனையை மாநில அரசும் கவனத்தில் கொண்டுள்ளது. கன்னட மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கடிதம் எழுதி, 'கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் படத்தை வெளியிட வேண்டாம்' என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு நாங்கள் கட்டுப்பட்டுள்ளோம். இந்த விஷயத்தில் கர்நாடக திரைப்பட வர்த்தக மன்றம் மற்றும் மாநில அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைக்கும், முடிவுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் துணை நிற்கும்" என்றார்.