குடும்பத்துடன் 68 ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கமல்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரர் சாருஹாசன்!
நடிகர் கமல்ஹாசன், இன்று தன்னுடைய பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில்... குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் கமல்ஹாசன், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீனிவாசன் இராஜலக்ஷ்மி தம்பதிகளுக்கு பிறந்தார்.
நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடன இயக்குனர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட இவர் இன்று தன்னுடைய உறவினர்களுடன் மிகவும் எளிமையாக 68 ஆவது வயது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், 1960 ஆம் ஆண்டு... தமிழில் வெளியான 'களத்தூர் கண்ணம்மா' எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தன்னுடைய முதல் படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை ஜனாதிபதி கைகளால் பெற்ற பெருமைக்குரியவர்.
சுமார் 6 படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள கடந்து வந்த பாதைகள் மிகவும் சவால்கள் நிறைந்தது. ரொமான்டிக் ஹீரோவாக மட்டுமே பார்க்கப்பட்ட இவர், ஒரு கட்டத்திற்கு மேல் ஆளவந்தான், ஹே ராம், அன்பே சிவம், தசாவதாரம், போன்ற படங்களில் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்தார்.
தேசிய விருது உட்பட, மிகவும் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம பூசண், பத்மஸ்ரீ, செவாலியர் விருது, என். டி. ஆர் தேசிய விருது, கலைமாமணி விருது போன்றவற்றையும் பெற்றுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்து... தற்போது வரை சுமார் 62 ஆண்டுகளில் 233 படங்களில் நடித்து முடித்துள்ள கமல் அடுத்ததாக தன்னுடைய மருமகன் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சுமார் 35 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் இவர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். நேற்று இந்த படம் குறித்த அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில் கமல்ஹாசன் தன்னுடைய பிறந்த நாளை குடும்பத்தினரோடு கொண்டாடிய சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் கமலுக்கு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார்.