‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ புரமோஷனுக்காக IPL-ஐ பயன்படுத்தும் விக்னேஷ் சிவன் - இது வேறலெவல் ஐடியாவா இருக்கே!
Kaathuvaakula Rendu Kaadhal : இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக பார்க்கப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை மையமாக வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு செய்யும் புரமோஷன் கவனம் பெற்றுள்ளது.
போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்ததாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன் தாரா ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும், லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால், அதன் புரமோஷன் பணிகளும் வேகமெடுத்துள்ளன. நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தற்போது இந்தியா முழுவதும் விறுவிறுப்பாக பார்க்கப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை மையமாக வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு செய்யும் புரமோஷன் கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தில் இடம்பெறும் டூடூடூ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதனால் எங்கு 2 என்கிற நம்பர் வந்தாலும் அதனை புரமோஷனுக்கு பயன்படுத்தி விடுகிறார் விக்னேஷ் சிவன். அந்த வகையில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் - டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்திருந்தது. அதனை காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழு தங்களின் புரமோஷனுக்காக பயன்படுத்தி உள்ளது.
அதேபோல் மும்பை - சென்னை அணிகள் மோதிய போட்டியில் தோனி 28 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார். தங்களின் படம் ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாவதால் அதையும் தங்களது புரமோஷனுக்காக பயன்படுத்திக் கொண்டார் விக்னேஷ் சிவன்.
இதையும் படியுங்கள்... பிரியங்கா மோகனுக்கு அடித்தது ஜாக்பாட்... சூர்யாவை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ பட நடிகருடன் ஜோடி சேர்கிறார்