500 கோடிக்கே அல்லல்படும் கோலிவுட்டின் 1000 கோடி வசூல் கனவை நனவாக்கப்போகும் படம் எது?
ஒரு ஆயிரம் கோடி வசூல் படம் கூட கொடுக்காத திரையுலகமாக தமிழ் திரையுலகம் உள்ளது. கோலிவுட்டின் இந்த ஆயிரம் கோடி வசூல் கனவை நனவாக்கும் படம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Kollywood Box Office
இந்திய சினிமாவில் 1000 கோடி வசூல் என்பது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. முதன்முதலில் ஆயிரம் கோடி வசூல் அள்ளிய படம் என்றால் அது அமீர்கான் நடித்த தங்கல் தான். இதையடுத்து ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் இந்த மைல்கல்லை எட்டிய முதல் தென்னிந்திய படமாக அமைந்தது. பின்னர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2, யாஷின் கன்னட திரைப்படமான கேஜிஎஃப் 2, பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி, அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் உள்ளிட்ட படங்கள் ஆயிரம் கோடி வசூலை அள்ளி சாதனை படைத்தன.
தடுமாறும் கோலிவுட்
பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய திரையுலகமாக கருதப்படும் கோலிவுட் இதுவரை ஒரு ஆயிரம் கோடி வசூல் படம் கூட கொடுக்கவில்லை. இங்கு அதிகபட்சமே 800 கோடி தான். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் தான் அதிகபட்ச வசூலை செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரஜினி - நெல்சன் கூட்டணியில் வெளிவந்த ஜெயிலர் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ ஆகிய படங்கள் உள்ளன. இதில் ஜெயிலர் திரைப்படம் 650 கோடியும், லியோ 625 கோடியும் வசூலித்திருந்தன. இந்த இரண்டு படங்களும் 2023-ல் வெளிவந்தவை. அதன் பின் வெளிவந்த படங்கள் அனைத்துமே 500 கோடி வசூலை எட்டிப்பிடிக்கவே திக்குமுக்காடி வருகின்றன.
கோலிவுட்டின் 1000 கோடி கனவு நனவாகுமா?
2025-ம் ஆண்டு கோலிவுட்டில் எந்த படமெல்லாம் 1000 கோடி வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டதோ அந்த படங்கள் அனைத்துமே சொதப்பிவிட்டன. குறிப்பாக கோலிவுட் மிகவும் எதிர்பார்த்த கமல்ஹாசனின் தக் லைஃப் படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தட்டுத் தடுமாறி 500 கோடி வசூலித்ததே பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படத்திற்கு முதல் நாளே நெகடிவ் விமர்சனங்கள் குவிந்தன. இதனால் இப்படம் 300 கோடி தொடுவதே கஷ்டம் தான் என கூறப்பட்டது. அதையும்மீறி கூலி 518 கோடி வசூல் செய்தது.
ஆயிரம் கோடி வசூல் கனவுடன் வரும் படங்கள் என்னென்ன?
ஜன நாயகன்
கோலிவுட்டில் ஆயிரம் கோடி வசூல் கனவுடன் இருக்கும் படங்கள் 3 தான். அதில் ஒன்று விஜய்யின் ஜன நாயகன். எச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் இதன் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. இப்படம் ஆயிரம் கோடி வசூல் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜெயிலர் 2
ஆயிரம் கோடி வசூல் கனவில் இருக்கும் மற்றொரு திரைப்படம் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜெயிலர் முதல் பாகமே ரூ.650 கோடிக்கு மேல் வசூல் செய்ததால், அதன் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி - கமல் படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், உலகநாயகன் கமல்ஹாசனும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகவில்லை. 46 ஆண்டுகளுக்கு பின்னர் ரஜினியும் கமலும் இணைவதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு வானுயர உள்ளது. அதனால் இப்படமும் ஆயிரம் கோடி வசூல் கனவுடம் தயாராகிறது.