SPB-க்காக ஒரு மாதம் காத்திருந்து இளையராஜா உருவாக்கிய மாஸ்டர் பீஸ் பாடல் பற்றி தெரியுமா?
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 5ம் ஆண்டு நினைவு தினமான இன்று அவருக்காக இளையராஜா ஒரு மாதம் காத்திருந்து ரெக்கார்டு செய்த பாடல் பற்றி பார்க்கலாம்.

SPB Song Secret
மறைந்தாலும் இசையால் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பாடகர் என்றால் அது எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். அவர் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். ‘இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்’ என அவர் பாடல் வரிகளுக்கு ஏற்றார்போல், தன்னுடைய பாடல்கள் மூலம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். எஸ்.பி.பி.யின் கெரியரில் அவர் பல்வேறு சூப்பர்ஹிட் பாடல்களை பாடியது இளையராஜாவுக்கு தான். இவர்களின் காம்போவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்படி இவர்கள் காம்போவில் உருவான ஒரு மாஸ்டர் பீஸ் பாடலை பற்றி தான் பார்க்க உள்ளோம்.
எஸ்பிபி பாடல் ரகசியம்
ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடு சென்றுவிட்டதால் அவருக்காக இளையராஜா சுமார் ஒரு மாசம் காத்திருந்து ஒரு பாடலை ரெக்கார்டு செய்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் தான். அவர் தான் இயக்கும் படத்திற்காக பாடல் ஒன்றை எழுதிக்கொண்டுபோய் இளையராஜாவிடம் கொடுத்திருக்கிறார். பாடல் வரிகளை கொடுத்தது மட்டுமின்றி, ராஜாவிடம் ஒரு முக்கியமான கண்டிஷனையும் போட்டிருகிறார். அது என்னவென்றால் இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாராம். இதனால் இளையராஜாவும் உடனே எஸ்.பி.பிக்கு போன் போட்டிருக்கிறார். அப்போது தான் அவர் ஃபாரினில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு மாதம் காத்திருந்த இளையராஜா
எஸ்பிபி வர ஒரு மாசம் ஆகும் என கூறியதால், சரி வேறு சிங்கரை வைத்து அப்பாடலை பதிவு செய்யலாம் என சொல்லி இருக்கிறார் இளையராஜா. ஆனால் அதற்கு நோ சொன்ன ஆர்.வி.உதயகுமார், எத்தனை நாள் ஆனாலும் சரி இந்தப் பாட்டை எஸ்.பி.பி தான் பாட வேண்டும் என திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். இதனால் வேறு வழியின்றி எஸ்.பி.பி வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பும் வரை ஒரு மாத காலம் காத்திருந்து ரெக்கார்டு செய்த பாடல் தான் கார்த்திக்கின் கிழக்கு வாசல் திரைப்படத்தில் இடம்பெறும் ‘பச்சமல பூவு’ என்கிற பாடல். இந்த மாஸ்டர் பீஸ் பாடலை தான் சுமார் ஒரு மாசம் வெயிட் பண்ணி ரெக்கார்டு செய்திருக்கிறார் இளையராஜா.
மெய்மறக்க செய்த எஸ்பிபியின் குரல்
கதாநாயகியை, நாயகன் தாலாட்டு பாடி தூங்க வைக்கும் சிச்சுவேசனில் வரும் இந்த பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரலில் கேட்டால் யாராக இருந்தாலும் மெய்மறந்து போவார்கள். ஒரு தாலாட்டு பாடலுக்கான மிகச்சிறந்த குரலாக எஸ்.பி.பி தேன்குரல் அமைந்திருந்ததோடு, அந்த பாடலுக்கும் மிக கச்சிதமாக பொறுந்தி இருந்தது. இப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான பாடலை ஒருவர் பாடிக்கொடுக்கிறார் என்றால் அவருக்காக ஒருமாசம் என்ன ஒரு வருஷமே காத்திருக்கலாம் என சொல்லும் வகையில் அந்தப்பாடல் அமைந்திருக்கும். அவரது குரலால் தான் இன்றளவும் அப்பாடல் பலரது மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளது.