இசையமைப்பாளரான இளையராஜா பேரன்.. தனது முதல் பாடலை வெளியிட்ட 'யத்தீஸ்வர் ராஜா'
இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் மகன் யத்தீஸ்வர் ராஜா தனது முதல் பாடலை வெளியிட்டுள்ளார்.

இளையராஜாவின் இசைக் குடும்பம்
தமிழ் திரையுலகில் இசைக் குடும்பமாக இளையராஜாவின் குடும்பம் விளங்கி வருகிறது. இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா, இளைய மகன் யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரணி, இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், அவரது மகன்கள் என அனைவரும் இசைத. துறையில் உள்ளனர். இதில் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இசையமைப்பாளர்களாகவும், பாடகர்களாகவும் இருந்து வருகின்றனர். மறைந்த பவதாரணி பல படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். கங்கை அமரனின் மகன்களான வெங்கட் பிரபு, மற்றும் பிரேம்ஜியும் சில படங்களில் பாடல்களை பாடியுள்ளனர்.
இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜாவின் முதல் பாடல்
அந்த வரிசையில் இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா, பக்தி பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜாவின் மகன்தான் யத்தீஸ்வரர் ராஜா. இவரும் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் வாய்ப்பு தேடி வரும் அவர், பக்தி பாடல் ஒன்றை இசையமைத்து திருவண்ணாமலையில் வெளியிட்டுள்ளார். தாத்தா போலவே திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மீது பக்தியுடன் இருந்த அவர், தனது முதல் பாடலை அண்ணாமலையார் மீது பாடி இசையமைத்துள்ளார்.
முதல் பாடலே பக்தி பாடலாக இசையமைத்த யத்தீஸ்வரர் ராஜா
இளையராஜா அடிக்கடி செல்லும் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில், ஆசிரம நிர்வாகிகள் முன்னிலையில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து யத்தீஸ்வரர் ராஜா கூறுகையில், “சிறு வயது முதலே எனக்கு இசை மீது ஆர்வம் இருந்தது. விஸ்காம் படிப்பை முடித்துள்ள நான், இசைத்துறையில் மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளேன். முதல் பாடல் பக்தி பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்தப் பாடலை உருவாக்கும் முன்பு, தாத்தா இளையராஜாவிடம் சில ஆலோசனைகளை கேட்டேன். வரிகள் எழுதுவதற்கு என் தந்தை கார்த்திக் ராஜா உதவினார். தாத்தா, அப்பா போல எனக்கும் சினிமாவில் இசையமைக்க ஆர்வம் இருக்கிறது. நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
மகனை வாழ்த்துங்கள் - கார்த்திக் ராஜா பேட்டி
மகன் யத்தீஸ்வர் குறித்து பேசிய கார்த்திக் ராஜா, “திருவண்ணாமலை கிரிவலம் சென்ற போது பக்திப் பாடல்களை கேட்ட யத்தீஸ்வரர், தானும் அப்படி ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று ஆசை கொண்டார். அதன் அடிப்படையிலேயே அவர் இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார். எங்கள் குடும்பத்தில் இருந்து இன்னொரு இசையமைப்பாளர் உருவானது எங்களுக்கு சந்தோஷம், பெருமை. மற்றொருபுறம் பயமாகவும் இருக்கிறது. இங்கே மக்கள்தான் நீதிபதி, இந்த பாடலைக் கேட்டுவிட்டு அனைவரும் எனது மகனை வாழ்த்த வேண்டும்” என்றார்.