ஒரே டியூனில் 3 பாட்டு; எல்லாமே அடிபொலி ஹிட்... கில்லி மாதிரி சொல்லி அடித்த இளையராஜா..!
இசைஞானி இளையராஜா, இசையில் பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவர். அவர் ஒரே ஒரு டியூனில் மூன்று வெவ்வேறு பாடல்களை உருவாக்கி அந்த மூன்று பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன.

Ilaiyaraajaa Compose 3 Songs With Same Tune
இளையராஜா என்று சொன்னதும் அனைவருக்கும் நினைவில் வருவது அவரது பாடல்கள் தான். தமிழ் சினிமா ரசிகர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறும் அளவுக்கு இளையராஜாவின் இசையும், பாடல்களும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அவரது பாடல்கள் காலம் கடந்தும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இளையராஜாவுக்கு 82 வயது ஆன போதிலும் இன்றளவும் பிசியான இசையமைப்பாளராகவே வலம் வருகிறார். இந்த வயதிலும் தன்னுடைய முதல் சிம்பொனியை அரங்கேற்றி சாதனையையும் படைத்துள்ளார். இப்படி எண்ணில் அடங்காத சாதனைகளை படைத்த அவர், ஒரே டியூனில் 3 ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளதை பற்றி தான் பார்க்க உள்ளோம்.
ஒரே டியூனில் மூன்று ஹிட் பாடல்
இளையராஜாவின் இசையால் ஹிட் அடித்த படங்களில் விஜயகாந்தின் நூறாவது நாள் திரைப்படமும் ஒன்று. 1984-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன், நளினி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். மணிவண்ணன் இயக்கிய இப்படம் த்ரில்லர் கதையம்சத்தில் உருவாகி இருந்தது. இப்படத்தில் இளையராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. அதில் ஒரு பாடல் தான், ‘விழியிலே மணி விழியிலே’ என்கிற பாட்டு. அந்த காலகட்டத்தில் காதலர்களின் ஃபேவரைட் பாடலாக இது இருந்து வந்தது.
இளையராஜா பாடல் ரகசியம்
இந்த பாடலுக்கான மெட்டை, இதுதவிர வேறு இரண்டு பாடல்களிலும் பயன்படுத்தி இருந்தார் இளையராஜா. அந்த இரண்டுமே தமிழ் படங்கள் அல்ல, ஒன்று கன்னடப் படம், மற்றொன்று இந்திப் படம். கன்னடத்தில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியான கீதா என்கிற திரைப்படத்தில் தான் முதன்முதலில் அந்த டியூனை பயன்படுத்தி இருந்தார் இளையராஜா. இந்தப் பாடல் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆனதால் தான் பின்னர் அதை நூறாவது நாள் படத்தில் பயன்படுத்தினார்.
ராஜா மேஜிக்
இதையடுத்து இந்தியில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சீனிக்கும் என்கிற படத்தில் அதே மெட்டை பயன்படுத்தி ஒரு பாடல் உருவாக்கி இருந்தார். இப்பாடலை இந்தியில் ஸ்ரேயா கோஷல் பாடி இருந்தார். அமிதாப் பச்சன் நடித்த இப்படம் ஹிட்டானதோடு, அந்த பாடலும் அமோக வரவேற்பை பெற்றது. இப்படி ஒரே மெட்டை வைத்து மூன்று மொழிகளில் வெவ்வேறு படங்களுக்கு அடிபொலியான பாடல்களை கொடுத்து தான் ஒரு ஜீனியஸ் என நிரூபித்திருக்கிறார் இளையராஜா.