- Home
- Cinema
- Bhagyaraj : ஒரே கதையை பாரதிராஜா - பாக்யராஜ் என இரு ஜாம்பவான்கள் இயக்கி ஹிட் அடித்த அதிசயம்... என்ன படம் தெரியுமா?
Bhagyaraj : ஒரே கதையை பாரதிராஜா - பாக்யராஜ் என இரு ஜாம்பவான்கள் இயக்கி ஹிட் அடித்த அதிசயம்... என்ன படம் தெரியுமா?
Bhagyaraj Movie Secret : பாரதிராஜாவும், பாக்யராஜும் ஒரே கதையை இரண்டு வெவ்வேறு படங்களாக எடுத்து, அதை ஹிட்டாக்கி இருக்கிறார்கள். அது எந்தெந்த படங்கள் என்பதை பார்க்கலாம்.

Bhagyaraj Movie Secret
தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே கதையை இரண்டு முன்னணி இயக்குநர்கள் தங்களது தனிப்பட்ட பாணியில் இயக்கி, இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சம்பவங்கள் மிகக் குறைவு. அந்த அரிய பட்டியலில் இடம்பிடிக்கும் படங்கள்தான் தமிழில் வெளியான 'ஒரு கைதியின் டைரி' மற்றும் அதன் இந்தி ரீமேக்கான 'ஆக்ரி ரஸ்தா'.
1985-ஆம் ஆண்டு வெளியான ஒரு கைதியின் டைரி படத்திற்கு கதை மற்றும் திரைக்கதையை எழுதியவர் கே. பாக்யராஜ். இயக்குநர் பாரதிராஜா தனது இயல்பான உணர்வுபூர்வமான பாணியில் அந்த கதையை இயக்கி இருந்தார். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படத்தில் ரேவதி, ராதா, ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
பாரதிராஜாவுக்கு பாக்யராஜ் சொன்ன அறிவுரை
இந்தக் கதையை பாரதிராஜாவிடம் ஒப்படைத்தபோது, "இது என் கதை என்றாலும், உங்கள் பாணிக்கேற்ற மாற்றங்களை தாராளமாக செய்யலாம்" என்று பாக்யராஜ் கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவாக, பாரதிராஜாவின் கைவண்ணத்தில் ஒரு வெற்றிப்படமாக ஒரு கைதியின் டைரி உருவானது.
தமிழில் வெற்றி பெற்ற இந்தக் கதையை பின்னர் இந்தியில் இயக்க முடிவு செய்தார் பாக்யராஜ். கதாநாயகனாக அமிதாப் பச்சன் மட்டுமே பொருத்தமாக இருப்பார் என்று கருதிய அவர், கதையை நேரடியாக அமிதாப்பிடம் கூறியுள்ளார். கதை பிடித்ததால் உடனடியாக படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது.
அமிதாப்புக்கு பாக்யராஜ் போட்ட கண்டிஷன்
ஆனால், படம் தொடங்கும் முன்பே அமிதாப் பச்சனிடம் ஒரு முக்கிய விஷயத்தை பாக்யராஜ் தெளிவுபடுத்தியிருந்தார். "தமிழில் பாரதிராஜா தனது ஸ்டைலில் இந்தக் கதையை எடுத்தார். ஆனால் இந்தியில் நான் இயக்குவதால், என் சொந்த பாணியில்தான் படம் இருக்கும்" என்று அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு அமிதாப்பும் சம்மதம் தெரிவித்தார்.
இதன் பிறகு ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி உள்ளிட்டோருடன் ஆக்ரி ரஸ்தா உருவானது. தமிழ் பதிப்பிலிருந்து பல காட்சிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, தந்தை-மகன் சந்திக்கும் காட்சிகள், கதாநாயகனின் ஆங்கில அறிவை மையமாகக் கொண்ட உணர்ச்சிகரமான தருணங்கள் உள்ளிட்டவை இந்தி பதிப்பில் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தன.
மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்
அதேபோல், இரண்டு படங்களின் கிளைமாக்ஸும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. தமிழில் இருந்த கிளைமாக்ஸ் காட்சியை மீண்டும் பயன்படுத்தலாம் என்று அமிதாப் பச்சன் விரும்பியதாக கூறப்படுகிறது. ஆனால், புதிய கிளைமாக்ஸ் வேண்டும் என்பதில் பாக்யராஜ் உறுதியாக இருந்தார். முதலில் தான் எடுக்கும் காட்சியைப் பார்த்துவிட்டு முடிவு செய்யுமாறு அவர் அமிதாப்பிடம் கேட்டதாகவும், அந்த காட்சியை பார்த்த பிறகு அமிதாப் அதையே இறுதியாக ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பாக்யராஜ் மேஜிக்
1986-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான ஆக்ரி ரஸ்தாவும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. தமிழில் வெற்றி கண்ட கதை, இந்தியில் வேறுபட்ட திரைக்கதை அமைப்புடன் மீண்டும் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல், அமிதாப் பச்சனின் அன்றைய மார்க்கெட்டையும் மேலும் வலுப்படுத்திய படமாகவும் அமைந்தது.
ஒரே கதையை இரண்டு இயக்குநர்கள் தங்களது தனித்துவமான கைவண்ணத்தில் வெற்றிப்படங்களாக மாற்றிய இந்த சம்பவம், இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக இன்றும் பேசப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

