ஓ2 முதல் கார்கி வரை... 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ள தமிழ் படங்கள் என்னென்ன?
ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக 12 தமிழ் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்படும்.
சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற திரைப்பட விழாக்களில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்படும் இவ்விழா, இந்த ஆண்டு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 15-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் தமிழ் படங்கள் மட்டுமின்றி மொத்தம் 48 நாடுகளைச் சேர்ந்த 107 திரைப்படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன. இதில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களும் திரையிடப்பட உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த பட விழாவில் பங்கேற்பதற்காக 12 தமிழ் திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் மூன்று படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்படும்.
இதையும் படியுங்கள்... வணங்கான் படத்திலிருந்து விலகிய சூர்யா... அவருக்கு பதில் வாரிசு நடிகரை களமிறக்கும் பாலா..?
அந்த வகையில் இந்த ஆண்டு தேர்வாகி உள்ள 12 தமிழ் படங்களின் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த கார்கி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது, பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல், விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் வெளிவந்த மாமனிதன், கருணாஸ் நடித்த ஆதார் போன்ற படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன.
இதுதவிர சிம்பு தேவன் இயக்கிய கசடதபற, அசோக் வீரப்பனின் பஃபூன், மனோ வி கண்ணதாசனின் இறுதிப்பக்கம், நயன்தாரா நடித்த ஓன் போன்ற படங்களுடன் இன்னும் திரைக்கு வராத பிகினிங், யுத்த காண்டம் மற்றும் கோட் ஆகிய திரைப்படங்களும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளன.
இதையும் படியுங்கள்... விஜய்யின் வாரிசு படத்திற்கு பாட்டு பாட சிம்பு கேட்ட சம்பளம் எவ்வளவு? வெளியான ஆச்சர்ய தகவல்