ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் என்னென்ன? முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
ஓடிடி தளங்களில் கடந்த வாரம் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன படங்கள் இடம்பிடித்துள்ளன என்பதை பார்க்கலாம்.

Top 5 most watched films on OTT
ஓடிடி தளங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. முன்பெல்லாம் ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனால் அதன் ஒரிஜினல் சிடி வெளியாக ஆறு மாதம் முதல் ஒரு வருடம் கூட ஆகலாம். ஆனால் தற்போது ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்துவிடுகிறது. இதனால் தியேட்டர் செல்லாமல் ஒரு மாதம் காத்திருந்து ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைப்பவர்கள் ஏராளம். இந்த நிலையில், ஓடிடியில் கடந்த மே 12ந் தேதி முதல் 18ந் தேதி வரை அதிக பார்வைகளை அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
வீர தீர சூரன்
நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த படம் வீர தீர சூரன் பாகம் 2. இப்படத்தை எஸ்.யு.அருண்குமார் இயக்கி இருந்தார். இப்படத்தில் விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். இப்படம் கடந்த மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இந்நிலையில், இப்படம் கடந்த வாரம் மட்டும் 17 லட்சம் பார்வைகளை பெற்று 5ம் இடத்தில் உள்ளது.
மேட் ஸ்கொயர்
தெலுங்கில் கல்யாண் சங்கர் இயக்கத்தில் வெளியான படம் மேட் ஸ்கொயர். இப்படத்தில் நிதின், பிரியங்கா ஜவல்கர், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படம் கடந்த வாரம் மட்டும் 18 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.
தி டிப்ளோமேட்
ஷிவம் நாயர் இயக்கத்தில் ஜான் ஆபிரஹாம் நடித்துள்ள இந்திப் படம் தான் தி டிப்ளோமேட். இப்படம் கடந்த மார்ச் மாதம் 18ந் தேதி திரைக்கு வந்தது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் அண்மையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 31 லட்சம் பார்வைகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளது.
ஒடேலா 2
தமன்னா நாயகியாக நடித்துள்ள ஒரு பேண்டஸி திரில்லர் திரைப்படம் தான் ஒடேலா 2. இப்படத்தை அசோக் தேஜா இயக்கி இருந்தார். இப்படத்தில் தமன்னா உடன் பூஜா ரெட்டி, ஹெபா படேல், முரளி சர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த மாதம் திரைக்கு வந்த இப்படம், அண்மையில் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. இப்படம் கடந்த வாரத்தில் 38 லட்சம் பார்வைகளை பெற்று 2ம் இடம் பிடித்துள்ளது.
குட் பேட் அக்லி
ஓடிடியில் அதிக பார்வைகளை அள்ளிய படம் என்கிற சாதனையை அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் படைத்துள்ளது. இப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இப்படம் கடந்த வாரம் மட்டும் 61 லட்சம் வியூஸ் அள்ளி முதலிடம் பிடித்துள்ளது.