ஹீரோ டூ வில்லன்... அசுர வளர்ச்சி கண்ட நடிகர் பகத் பாசிலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய மலையாள நடிகர் பகத் பாசில் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பகத் பாசில் சினிமாவில் கடந்த 2002-ம் ஆண்டு அறிமுகமானார். அதுவும் அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத் என்கிற படம் மூலம் அறிமுகமானார். அப்படம் தோல்வியை தழுவியதும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார் பகத். இவரெல்லாம் நடிகரா என கேலி செய்தவர்களும் உண்டு. இதனால் சினிமாவை விட்டு விலகிய பகத், 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் கேரளா காஃபே என்கிற படம் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து 2011-ம் ஆண்டு பகத் பாசில் நடிப்பில் வெளிவந்த சப்பா குரிஷு என்கிற திரில்லர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அப்படத்திற்காக அவருக்கு கேரள அரசின் மாநில விருதும் கிடைத்தது.
அழகாக இருந்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும் என்கிற மாய பிம்பத்தை தகர்த்தெறிந்தவர் பகத். இவர் உயரமாகவோ, ஹேண்ட்சம் ஆகவோ இல்லாவிட்டாலும் இவரின் நடிப்புத் திறமையால் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். வித்தியாசமான ரோல்களில் நடித்து மலையாள சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராகவும் இருக்கிறார் பகத். குறிப்பாக அவர் நடித்த அன்னையும் ரசூலும், மகேஷிண்டே பிரதிகாரம், கும்பலிங்கி நைட்ஸ், டிரான்ஸ், மாலிக் போன்ற படங்கள் உலகளவில் கவனம் பெற்றன.
தமிழிலும் நான்கு தரமான படங்களில் நடித்திருக்கிறார் பகத் பாசில், அவர் முதன்முதலில் கோலிவுட்டில் நடித்த திரைப்படம் வேலைக்காரன். அப்படத்தில் வில்லனாக நடித்த பகத் பாசில், பின்னர் தியாகராஜா குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் அமர் என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் அவர் நடித்த படம் தான் மாமன்னன். இப்படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தாலும், அவரை ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடும் அளவுக்கு அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி டிரெண்டிங் ஸ்டார் ஆக உருவெடுத்துள்ளார் பகத்.
நடிகர் பகத் பாசிலுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பெங்களூரு டேஸ் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பகத்துக்கும் நஸ்ரியாவுக்கும் 13 வயது வித்தியாசம் இருந்தாலும், காதல் அவர்களை ஒன்று சேர்த்தது. இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதையும் படியுங்கள்... துவங்கிய இடத்திலேயே முடிந்த 'லால் சலாம்'! திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேண்டுதல்!
50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பகத் பாசில், ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு வரை ரூ.36 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு மாமன்னன், புஷ்பா 2 என பெரிய படங்களில் நடித்து வருவதால் அவரின் சொத்து மதிப்பு தற்போது ரூ.50 கோடியை நெருங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு கொச்சியில் பல கோடி மதிப்பிலான ஒரு ஆடம்பர பங்களாவும் உள்ளது.
மலையாள படங்களில் மட்டும் நடித்தபோது 70 முதல் 80 லட்சம் வரை சம்பளமாக வாங்கிய பகத் பாசில். கடந்த 2021-ம் ஆண்டு புஷ்பா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பின்னர் தன் சம்பளத்தை மளமளவென உயர்த்தினார். அப்படத்திற்காக ரூ.3.5 கோடி சம்பளமாக வாங்கிய பகத், அதன்பின்னர் நடித்த விக்ரம் படத்திற்காக ரூ.4 கோடி சம்பளம் வாங்கினார். அண்மையில் வெளிவந்த மாமன்னன் படத்தில் நடிக்க அவருக்கு ரூ.5 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இதனால் படத்துக்கு படம் பகத் பாசிலின் மவுசு எகிறிக்கொண்டே செல்கிறது.
கார் மீது அலாதி பிரியம் கொண்டவராக இருக்கிறார் பகத் பாசில். அவரிடம் பல சொகுசு கார்கள் உள்ளன. அவரிடம் உள்ள விலையுயர்ந்த கார் என்றால் அது போர்ஸ் கார் தான். பச்சை நிற Porsche 911 Carrera S என்கிற ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக வைத்துள்ளார் பகத். இதன் விலை ரூ.1.84 லட்சமாக இருந்தாலும் ரூ.2.65 கோடி செலவு செய்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளார் பகத்.
இதுதவிர ரூ.70 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ், ரூ.2.35 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் Vogue போன்ற கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார் பகத். இப்படி சினிமாவில் அடுத்தடுத்து அசுர வளர்ச்சியை கண்டு வரும் பகத் பாசில் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... அஜித்தின் மாமனாருக்கு இப்படி ஒரு திறமையா? டி எம் எஸ் குரலில் பாடி அசத்திய வீடியோ வைரல்!