- Home
- Cinema
- சின்ன படங்கள் வரக்கூடாதா? தியேட்டர் கேட்டு கெஞ்சுறோம்... ஜெயிலர்-2 உடன் மோதி கதறி அழுத ட்ரோன்ஸ் படத் தயாரிப்பாளர்!
சின்ன படங்கள் வரக்கூடாதா? தியேட்டர் கேட்டு கெஞ்சுறோம்... ஜெயிலர்-2 உடன் மோதி கதறி அழுத ட்ரோன்ஸ் படத் தயாரிப்பாளர்!
ஹாரர் ஃபேண்டஸி காமெடி திரைப்படம் 'ட்ரோன்ஸ்' (Drones). ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' வெளியான மறுநாளே துணிச்சலாகத் திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் தவித்து வருகிறது.

தியேட்டர் கேட்டு கெஞ்சுறோம் - கதறி அழுத 'ட்ரோன்ஸ்' படத் தயாரிப்பாளர்!
ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ஹாரர் ஃபேண்டஸி காமெடி திரைப்படம் 'ட்ரோன்ஸ்' (Drones). இப்படத்தில் சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, 'பரிதாபங்கள்' டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, குரேஷி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த வாரம் அக்.15-ம் தேதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' திரைப்படம் வெளியான மறுநாள் பெரும் போட்டியாகத் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில், உரிய திரையரங்குகள் கிடைக்கவில்லை எனக் கூறி செய்தியாளர்கள் சந்திப்பில் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் சதீஸ் கண்கலங்கிப் பேசியுள்ளார்.
சின்னப் படங்கள் வரக்கூடாதா? - 'ட்ரோன்ஸ்' படத் தயாரிப்பாளர்!
செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சதீஸ், ஒரு பெரிய படம் வரும்போது சின்னப் படங்கள் வரக்கூடாதா? ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்தப் படத்திற்காகக் கடினமாக உழைத்திருக்கிறோம். நிச்சயமாகத் தலைவரின் 'ஜெயிலர்-2' படத்திற்கு டிக்கெட்டுகள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் ஆகும்; அப்போது டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் நமது படத்திற்கு வருவார்கள் என்று நினைத்துதான் படத்தை ரிலீஸ் செய்தோம். படம் நன்றாக இருந்தால் மக்கள் நிச்சயம் அங்கீகரிப்பார்கள் என நம்பினோம். படமும் நன்றாகவே வந்திருக்கிறது. தவறாக ஒரு படத்தை எடுத்திருந்தால் கூட நாங்கள் இப்போது இப்படிப் பேசியிருக்க மாட்டோம். சினிமா துறையின் ஆதரவு எங்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் எங்களுக்குத் தியேட்டர்களே கிடைக்கவில்லை.
நல்ல படத்தை எடுத்துவிட்டு திரையரங்கு உரிமையாளர்களிடம் போய் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு பணம் போட்டுப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். திரையரங்குகள் கிடைத்தால் மட்டுமே மக்கள் படத்தைப் பார்த்து அங்கீகரித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள். எங்களுக்கு விளையாடக் கிரவுண்டே கிடைக்கவில்லை; கிரவுண்ட் கிடைத்தால் தானே எங்கள் திறமையைக் காட்ட முடியும்?" என்று ஆதங்கத்துடன் கதறி அழுதுள்ளார்.
பெரிய படங்களே பின்வாங்கிய சூழலில் துணிந்த ட்ரோன்ஸ்
முன்னதாக படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கதாநாயகி சித்தி இத்னானியே, தலைவர் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எங்கள் படம் 1% கூட இல்லை என்று வெளிப்படையாகப் பேசியிருந்தார். தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்த 'ஓம்' திரைப்படமே தீபாவளி மோதல் கூட வேண்டாம் என்று தனது ரிலீஸை நவ.20-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது. மேலும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த 'ரணபலி' படத்திற்கே தமிழ்நாட்டில் போதிய திரையரங்குகள் கிடைக்காமல், குறிப்பிட்ட சில திரையரங்குகளில் தெலுங்கு பதிப்பில் மட்டுமே வெளியாகிப் பெரிய அளவில் வசூல் ஈட்ட முடியாமல் போனது.
இத்தகைய சூழலில் வெளியான 'ட்ரோன்ஸ்' படத்திற்கு மிகக் குறைந்த அளவிலான தியேட்டர்களும், ஒரு நாளைக்கு ஒரு காட்சி (Show) மட்டுமே கிடைத்ததே பெரிய விஷயமாக அமைந்தது. திரையரங்குகளில் படம் இளைஞர்களைச் சிரிக்க வைத்த போதிலும், தற்போது 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் மீண்டும் திரையரங்குச் சிக்கல் நீடிப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
தொடரும் தியேட்டர் நெருக்கடி: ரசிகர்கள் முன்வைக்கும் விமர்சனம்
ஆயுத பூஜை விடுமுறையைத் தொடர்ந்து பெரிய ஓப்பனிங் இருக்கும் என்றும், 'ஜெயிலர்-2' படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் தங்களது படத்திற்கு வருவார்கள் என்ற கணிப்பிலும் தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்தார். ஆனால், பெரும்பாலான திரையரங்குகள் மற்றும் திரைகள் 'ஜெயிலர்-2' படத்திற்கே ஒதுக்கப்பட்ட போதிலும், முதல் வாரத்தில் ரசிகர்கள் காட்டிய பேராதரவுக்கு அத்திரைகளே போதவில்லை என்ற சூழலே நிலவியது. முன்னதாக நன்றாக ஓடிக்கொண்டிருந்த 'பத்தா' திரைப்படத்திற்கே திரையரங்குகள் கிடைக்காமல் வசூல் பாதிக்கப்பட்ட நிலையில், ட்ரோன்ஸ் படக்குழு எடுத்த இந்த முடிவு தவறானது என்றும், "ஜெயிலர் 2-வுடன் மோதியதே மிகப்பெரிய தப்பு" என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வாரமும் புதிதாக 'ஹைக்கூ' மற்றும் சைத்ரா ஆச்சர் நடித்துள்ள ஹாரர் திரைப்படமான '418' உள்ளிட்ட படங்கள் குறைந்த திரையரங்குகளைப் பிடித்துள்ளதால், 2-வது வாரத்திலும் 'ட்ரோன்ஸ்' திரைப்படத்திற்குத் திரையரங்குகள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

