- Home
- Cinema
- பைசனை பார்த்து புல்லரிக்கும் கூட்டம்..! நிஜத்தை தடுக்காமல் படத்தை கொண்டாடும் அரசியல் தலைவர்கள்..!
பைசனை பார்த்து புல்லரிக்கும் கூட்டம்..! நிஜத்தை தடுக்காமல் படத்தை கொண்டாடும் அரசியல் தலைவர்கள்..!
தென் மாவட்டத்தில் எப்போது மோதல் மூலம் இரு சமூகத்தினரிடையே ஒற்றுமையை விதைக்கும் வகையில் பைசன் படத்தை உரிமை கொண்டாடிக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை நிஜத்திலும் கொண்டுவர முயற்சி செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் படத்தைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல அரசியல் கட்சி தலைவர்கள் உச்சி நுகர்ந்து பாராட்டித்தள்ளி வருவது பெரும் விவாதங்களை கிளப்பி உள்ளது.
சாதி குறித்துப் பேசும் பைசன் படத்தை பாராட்டும் அரசியல் கட்சி தலைவர்கள், நவீன யுகத்திலும் புரையோடி ஊறிப்போய்க் கிடக்கும் சாதி வேற்றுமையை கண்டும் காணாமல் இருப்பதும் சாதி தீயை தூண்டிவிட்டு, வேடிக்கை பார்ப்பதும் முரணாக இருக்க, அனைத்தையும் மாற்றும் சக்தி கொண்ட அதிகார பலத்தை கையில் வைத்துக்கொண்டு படத்தை பார்த்து சிலாகித்துக் கொண்டிருப்பது எப்படி சரியாக இருக்கும்? என்கிற கேள்வி மன்னையைப் பிடித்து உலுக்குகிறது.
திறமை இருந்தும் சாதியின் பெயரால் தனது கனவை எட்டிப் பிடிக்க ஒருவன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தனக்கு எதிராக போடப்படும் சதிகளை உடைத்தெருகிறான் என்ற வலி மிகுந்த கதைகளத்தை கொண்டதுதான் பைசன் படம். தென் மாவட்டத்தில் 90களில் வீரியமாக இருந்த சமூக மோதலுக்கு மத்தியில் ஒரு கபடி வீரன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உச்சம் தொடுகிறான் என அர்ஜுனா விருது பெற்ற மணத்தி கணேசன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பைசனின் பாய்ச்சலை பாராட்டியே ஆக வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், பைசன் படம் பேசிய அரசியலை தாண்டி பொதுவெளியில் அப்படத்தை படத்தை வைத்து அரசியல் வலை உருவாகி இருக்கிறது என்பதே உண்மை.
பைசன் படத்தை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜ் முதிர்ச்சியான அரசியலைப் பேசி இருப்பதாக நேரில் அழைத்து பாராட்டி அகமகிழ்ந்தார். நல்ல படங்களை வரவேற்பது தவறு இல்லை என்றாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய விமர்சனத்தையும் புறம்தள்ளிவிட்டுப் போக முடியாது. கனமழை கொட்டித் தீர்க்கும்வேளையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லை பிடித்திருக்க வேண்டிய கைகள், பைசன் பட குழுவினரின் கைகளை பிடித்துக் கொண்டு இருப்பதாக விமர்சனம் செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜெய் பீம் படம் பார்த்து உள்ளம் குளிர்ந்து போனவர், தனது ஆட்சிக்கு கீழ் தொடர்கதையாக உள்ள அஜித் போன்ற லாக்கப் மரணங்களை தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இப்படித்தான் தூய்மை பணியாளர்களை குண்டுக் கட்டாக கைது செய்யும்போது கூலி படத்தை பார்த்துக் கொண்டிருந்தார் மு.க.ஸ்டாலின் என காட்டமாக கூறியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்தோடு இன்னும் பல கேள்விகளும் எழுந்துள்ளது. சாதி ஒழிப்பு பேசும் பைசன் படத்தைப் பார்த்து பாராட்டும் வேளையில் திமுகவின் அமைச்சர்கள் சாதி சங்க மாநாடுகளில் பங்கேற்பதையோ, சுயசாதி பெருமை பேசுவதையோ யாரும் தடுத்தது போல் தெரியவில்லை. ஒரு பக்கம் சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகளை தடுக்க வேண்டிய இடத்தில் இருந்தும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இன்னொரு பக்கம் படத்தைப் பார்த்து பகுமானமாக பாராட்டுவதில்தான் எத்தனை முரண்? இது ஒரு பக்கம் இருக்க திமுகவின் கூட்டணி கட்சியினரும் சொல்லி வைத்தது போல பைசன் படத்திற்கு சென்று பாராட்டித்தள்ளி இருக்கிறார்கள்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் என பலரும் பைசன் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் இது குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளது. அந்த காலத்திலேயே தீவிரமாக சாதி ஒழிப்பு பேசி இன்றுவரையிலும் சாதி ஆணவக் கும்பலை அலற விடுவதாக கூறிக்கொள்ளும் தந்தை பெரியார் வழிவந்த திராவிடர் கழகத்தை கையில் வைத்திருக்கும் கி.வீரமணி தற்போது நிகழும் சாதிய வன்முறைகளை பார்த்து அமைதியாக இருந்ததைத்தவிர, வேறு என்ன செய்தார்? இந்த கேள்வியைத்தான் காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட்டின் முத்தரசன் போன்றவர்களிடமும் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வேல்முருகன், கருணாஸ், தனியரசு போன்றவர்கள் எல்லாம் பைசன் படத்தை பார்த்துப் பாராட்டி இருப்பதுதான் இன்னும் ஹைலைட். முக்குலத்தோர் புலிப்படை என சாதியின் பெயரிலேயே கட்சி நடத்திக் கொண்டு எந்த மேடை கிடைத்தாலும் சுயசாதி பெருமை பேசும் கருணாஸ், சாதி ஒழிப்பு பற்றி பேசும் பைசன் படத்தைப் பார்த்து கண் கலங்கியதாக கூறுவதெல்லாம் குடல் காய்ந்தால், குதிரையும் வைக்கோல் திங்கும் என்கிற கதையாக இருக்கிறது. இதே மாரி செல்வராஜ், கொங்கு மண்டல சாதி அரசியலை மையமாக வைத்து மாமன்னன் படம் எடுத்தபோது பீறிட்டு எதிர்த்த வகையறாக்களைச் சார்ந்த தனியரசுதான் தற்போது பைசன் படத்தை பாராட்டுகிறார். சமூக கருத்து கொண்ட படங்களை பாராட்டுவது தவறு இல்லை என்றாலும் தற்போது நடக்கும் சாதிய வன்முறைகளுக்கு நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து விட்டு, படத்தை பாராட்டி மட்டும் என்ன பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்?
சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகளும், அடக்குமுறைகளும் நீடித்துக் கொண்டே இருக்கும்போது அதனை தடுக்க ஏதோ ஒரு வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டிய, எதிர்த்துப் போராட வேண்டிய அரசியல்வாதிகள் சாதி ஒழிப்பு, ஆரிய ஒழிப்பு போன்ற படங்கள் வரும்போது மட்டும் புளங்காகிதம் அடைந்து, விளம்பரப்படுத்தி புல்லரிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழாமல் இல்லை. தென் மாவட்டத்தில் எப்போது மோதல் மூலம் இரு சமூகத்தினரிடையே ஒற்றுமையை விதைக்கும் வகையில் பைசன் படத்தை உரிமை கொண்டாடிக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தை நிஜத்திலும் கொண்டுவர முயற்சி செய்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்’’ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுதுதான் தொலைக்கவேண்டும்.