தவெக மதுரை மாநாட்டிற்கும்... விஜய் மனைவி சங்கீதாவுக்கும் உள்ள கனெக்ஷன் பற்றி தெரியுமா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநாடு மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலை பார்க்கலாம்.

TVK Maanadu Madurai
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக கடந்த ஆண்டு அறிவித்தார். அதோடு தனது கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டுள்ளதாகவும் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற்றது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர். இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக இருந்தது.
தவெக மதுரை மாநாடு
இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு எங்கு நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ந் தேதி மதுரையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டிற்கான பூமி பூஜை இன்று போடப்பட்டது. இதற்கு கூடிய கூட்டமே மினி மாநாடு போல இருந்தது. இந்த மாநாட்டுக்கான பணிகள் தொடங்கி உள்ளன. கடைசியாக வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்திய விஜய், அதன் பின்னர் தவெக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 25 என்ன ஸ்பெஷல்?
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 25ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் விஜய்க்கு மற்றுமொரு ஸ்பெஷலான தினம் என்பதும் தெரியவந்துள்ளது. நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை கரம்பிடித்ததும் அன்றைய தினம் தானாம். விஜய் தன்னுடைய திருமண நாளன்றே மாநாடு நடத்த உள்ளது ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக பரவலாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட ஜேப்பியார் வீட்டு இல்லத் திருமண விழாவில் இருவரும் தனித்தனியே வந்து கலந்துகொண்டதாக கூறப்பட்டது.
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்?
இப்படி விஜய்யின் திருமண வாழ்க்கை பற்றி பல்வேறு கருத்துக்கள் உலா வரும் நிலையில், தன்னுடைய திருமண நாள் அன்றே விஜய் மாநாடு வைத்துள்ளதால், தன்னைப்பற்றிய சர்ச்சைகளுக்கு அவர் விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு சிலரோ மாநாட்டுக்கு விஜய் தன்னுடைய மனைவி சங்கீதாவை அழைத்து வந்தால் சூப்பராக இருக்கும் என கூறி வருகின்றனர். நடிகர் விஜய் கடைசியாக மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவுக்கு தன் மனைவி சங்கீதாவை அழைத்து வந்தார். அதன்பின் அவரது பட விழாக்களில் சங்கீதா தலைகாட்டவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.