நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி காலமானார்
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா மதுரை வீரகனூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த வடிவேலு, கடந்த ஆண்டு தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் வடிவேலுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் வடிவேலு. மேலும் பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி படத்தின் 2-ம் பாகத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுதவிர விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகி உள்ளார்.
இவ்வாறு மீண்டும் சினிமாவில் அடுத்த இன்னிங்ஸை தொடங்கி, வடிவேலு பிசியாக நடித்து வந்த நிலையில், நேற்று இரவு அவரது தாயார் சரோஜினி என்கிற பாப்பா காலமானார். அவருக்கு வயது 87. மதுரை வீரகனூரில் அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. தாயாரை இழந்து தவிக்கும் வடிவேலுவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.