கோயம்புத்தூரில் நடைபெற இருந்த இளையராஜா இசைக்கச்சேரி திடீரென ஒத்திவைப்பு - காரணம் என்ன?
இசைஞானி இளையராஜாவின் இசைக் கச்சேரில் கோயம்புத்தூரில் மே 17ந் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அது தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

Ilayaraja concert postponed!
இசைஞானி இளையராஜாவுக்கு தற்போது 81 வயது ஆனாலும் இந்த வயசிலும் பம்பரம் போல் பிசியாக சுழன்று வருகிறார். அவர் இசையமைத்த பாடல்கள் தான் இன்றைக்கும் ஏராளமான படங்களில் பயன்படுத்தப்பட்டு, அது மீண்டும் டிரெண்டாகி வருகின்றன. இன்றைய சூழலில் இளையராஜாவின் பழைய பாடல்களை பயன்படுத்துவது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது. அண்மையில் தன்னுடைய முதல் சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றி வரலாறு படைத்தார் இளையராஜா.
இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி
இசைஞானி இளையராஜா, படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரி நடத்தி அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக இவர் தமிழ்நாட்டில் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் கரூரில் இவரின் இசைக்கச்சேரி நடைபெற்ற நிலையில், அடுத்ததாக கோவையில் வருகிற மே 17ந் தேதி இசைக்கச்சேரியை நடத்த திட்டமிட்டு இருந்தார் இளையராஜா.
இசைக்கச்சேரியை தள்ளிவைத்த இளையராஜா
இசைக்கச்சேரிக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியை திடீரென தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளார் இளையராஜா. அதன்படி அந்த இசைக்கச்சேரி மே 17ந் தேதிக்கு பதிலாக மே 31ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் இந்த இசைக்கச்சேரியை தள்ளிவைத்து உள்ளார்களாம். இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நிதி வழங்கிய இளையராஜா
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜா, தேசிய பாதுகாப்பு நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்தையும், தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருமானத்தையும் வழங்குவதாக அறிவித்து இருந்தார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்களும் குவிந்து வந்தன. அண்மையில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாத முகாம்களை தகர்த்தது. இதன் பின்னர் பாகிஸ்தானும் பதிலடி கொடுத்ததால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.