32 ஆண்டுகளுக்கு பின் ஜம்மு-காஷ்மீரில் திறக்கப்பட உள்ள திரையரங்கம்... முதல் படமே பொன்னியின் செல்வன் தான்
Jammu Kashmir : ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதை கருத்தில் கொண்டு, அங்கு மீண்டும் திரையரங்குகளை திறக்க உள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரில் 1980-களில் ஏராளமான திரையரங்குகள் இயங்கி வந்துள்ளன. அந்த திரையரங்குகளெல்லாம் கடந்த 1990-ம் ஆண்டு மூடுவிழா கண்டன. இதற்கு காரணம் தீவிரவாதிகள் தான். கடந்த 1990-ம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருந்த 11 தியேட்டர்களும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமானது. இதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.
பின்னர் 1996-ம் ஆண்டு பரூக் அப்துல்லா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், பிராட்வே மற்றும் நீலம் ஆகிய இரண்டும் தியேட்டர்களை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த சமயத்தில் இதற்கு போதிய ஆதரவு கிடைக்காததால் தியேட்டர் திறக்கும் முடிவை பாதியிலேயே கைவிட்டனர்.
இதையடுத்து 1999-ம் ஆண்டு லால் சவுக் என்கிற பகுதியில் ரீகல் எனும் தியேட்டர் திறக்கப்பட்டது. அந்த தியேட்டர் திறக்கப்பட்ட ஒரே வாரத்தில் அங்கு தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் மூடப்பட்டது. அதன்பின்னர் தியேட்டர் திறக்கும் முயற்சிகள் அங்கு மேற்கொள்ளப்படவில்லை.
இதையும் படியுங்கள்... தளபதிக்கு ‘ஹாட்ரிக் ஹிட்’ நெக்ஸ்ட் ஷாருக்கான் படம்னு வேகமா உயர்ந்தாலும்..நிறைவேறாமல் உள்ள அட்லீயின் ‘அந்த’ ஆசை
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதை கருத்தில் கொண்டு, அங்கு மீண்டும் திரையரங்குகளை திறக்க உள்ளனர். ஐநாக்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து 3 திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கப்பட உள்ளது. மொத்தம் 522 பேர் அமர்ந்து படம் பார்க்கக்கூடிய வகையில் இந்த திரையரங்குகள் கட்டப்பட்டு உள்ளன.
வருகிற அக்டோபர் 1-ந் தேதி இந்த திரையரங்குகள் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது. முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மற்றும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் இந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா ஆகிய படங்களை திரையிட உள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற செப்டம்பர் 26-ந் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் 32 ஆண்டுகளுக்கு ஜம்மு காஷ்மீரில் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விவேக் மட்டுமில்லைங்க... ரகுவரன் முதல் ரோஜா வரை கமலுடன் ஒருமுறை கூட நடிக்காத நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ