திரையுலகின் சீயானுக்கு இன்று பிறந்தநாள்... ‘கென்னி’ விக்ரம் பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ
நடிகர் விக்ரம் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரைப்பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி. அவரது பெற்றோர் அவரை செல்லமாக கென்னி என்றுதான் அழைப்பார்கள். ஆனால் விக்ரமுக்கு அந்தப் பெயர் மீது ஈர்ப்பு இல்லாததால் சினிமாவுக்கு வந்தவுடன் தன் பெயரை விக்ரம் என மாற்றிக் கொண்டார்.
மணிரத்தினம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படங்களில் பாம்பேவும் ஒன்று. அந்தப் படத்தில் நாயகனாக நடிக்க முதலில் கமிட்டானது விக்ரம் தான். அவரை வைத்து ஒரு சில காட்சிகள் படமாக்கிய பின்னர், தாடியை எடுக்குமாறு மணிரத்தினம் சொன்னாராம். ஆனால் வேறு ஒரு படத்திற்காக அந்த தாடியை வளர்த்து வந்ததால் அதை எடுக்க மறுத்ததோடு மட்டுமின்றி பாம்பே படத்திலிருந்தும் விலகிவிட்டார் விக்ரம்.
நடிகர் விக்ரமுக்கு கடந்த 1980 ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த சைலஜா என்பவர் உடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் கால் உடைந்து மூன்று ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த விக்ரம் ஊன்றுகோல் உதவியுடன் வந்து தான் திருமணம் செய்து கொண்டார்.
நடிகர் விக்ரம் நடிப்பதோடு மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கினார். குறிப்பாக ஷங்கர் இயக்கிய காதலன் படத்தில் பிரபுதேவாவுக்கு டப்பிங் பேசியதும் விக்ரம் தான். அதேபோல் கமல்ஹாசனின் குருதிப்புனல் மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அப்பாஸ் கேரக்டருக்கும் டப்பிங் பேசினார்.
விக்ரமின் தந்தை ஆல்பர்ட் விக்டரும் ஒரு நடிகர் தான். இவர் கில்லி, திருப்பாச்சி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஆரம்பிக்கலாங்களா... ஜாலியாக டூருக்கு கிளம்பிய பொன்னியின் செல்வன் படக்குழு - வைரலாகும் போட்டோஸ் இதோ
நடிகர் பிரசாந்த்தும், விக்ரமும் நெருங்கிய உறவினர்கள். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் நடிகர் விக்ரமின் தாய் மாமா ஆவார். குடும்பப் பிரச்சனை காரணமாக அவர்கள் பேசிக் கொள்வதில்லை.
நடிகர் விக்ரம் லயோலா கல்லூரியில் தான் படித்தார். அரவிந்த்சாமி, நடிகர் வெங்கடேஷ் மற்றும் மற்றும் இயக்குனர் தரணி ஆகியோர் விக்ரமுடன் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள் ஆவர்.
நடிகர் விக்ரம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஸ்பிரிட் ஆஃப் சென்னை என்கிற ஆந்தம் பாடலை இயக்கினார். சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது உதவிய நல் உள்ளங்களை போற்றும் விதமாக இந்த ஆந்தம் உருவாக்கப்பட்டது.
ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரர் விக்ரம். இவருக்கு கடந்த 2011-ம் ஆண்டு பாப்புலர் யுனிவர்சிட்டி ஆஃப் மிலன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
விக்ரம் மகன் துருவ் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவரது மகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. விக்ரமுக்கு அக்ஷிதா என்கிற மகள் உள்ளார். இவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனான மனு ரஞ்சித் என்பவரை தான் அக்ஷிதா திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இதையும் படியுங்கள்... டாக்டர் பட்டம் பெற்றார் பாடகர் மனோ - குவியும் வாழ்த்துக்கள்