இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? அஜித் வீட்டில் திடீர் சோதனை - போலீசார் குவிந்ததால் பரபரப்பு!
Bomb Threat Call Targets Ajith Kumar Residence: தல அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக, மின்னஞ்சல் வழியாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து அஜித் மீட்டில் சோதனை நடந்து முடிந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் வெடிகுண்டு மிரட்டல்:
கடந்த 3 மாதங்களாகவே பிரபல நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் வீட்டில் அடிக்கடி வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வருவதை தொடர்ந்து, போலீசாரும் மிரட்டல் விடும் இடங்களுக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மர்மநபரால் அனுப்பப்படும் மின்னஞ்சல்:
அந்த வகையில், ரஜினிகாந்த் வீடு, கமல்ஹாசனின் வீடு மற்றும் அலுவலகம், நயன்தாரா வீடு, த்ரிஷா வீடு, தவெக தலைவர் விஜயின் வீடு போன்ற இடங்களுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் வந்ததை தொடர்ந்து, போலீசாரும் அந்த இடங்களுக்கு மோப்ப நாயுடன் சென்று தேடி பார்த்தபின்னர் இது வதந்தி என்பது தெரியவந்தது.
போலீசாரின் தீவிர சோதனை:
இதை தொடர்ந்து தற்போது சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீசார் உடனடியாக அஜித்தின் வீட்டிற்கு சென்று, உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டு வீடு மற்றும் தோட்டம் முழுவதும் சோதனை செய்தனர்.
ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கும் மிரட்டல்:
பல மணி நேரத் தீவிர சோதனைக்குப் பின்னர், அஜித் வீட்டில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதை தொடர்ந்தே அஜித்தின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர். அஜித்தின் வீட்டை தொடர்ந்து... நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடு, நடிகர் எஸ்.வி. சேகர், காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் மற்றும் ஈவிபி ஃபிலிம் சிட்டி உள்ளிட்ட பிற இடங்களுக்கும் மிரட்டல்கள் வந்துள்ளன, அவை அனைத்தும் புரளிகள் என சோதனைக்கு பின்னர் போலீசாரும் நிரூபித்துள்ளனர்.
கண்டுபிடிப்பதில் தாமதம்:
தொடர்ந்து இது போன்ற பொய் மிரட்டல்கள் வரும் பட்சத்தில், மிரட்டல் விடுக்கும் நபர் யார் என்பதை ஏன் போலீசார் கண்டிபிடிக்கவில்லை என்பதே பலரது கேள்வியாக உள்ளது. அதே நேரம், மிரட்டல் விடுத்த நபர் யார் என்பதை அறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்ப VPN எனப்படும் (Virtual Private Network) பயன்படுத்துவதால், குற்றவாளியைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூடிய விரைவில் தமிழக போலீஸ் இதுக்கு ஒரு எண்டு கார்டு போடும் என நம்புவோம்.