தந்தைக்கு டஃப் கொடுக்க ரெடியான கதீஜா... இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரகுமான் மகள்
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமான், ஹலிதா ஷமீம் இயக்கி வரும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளார்.
தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் தொடங்கிய இவரது பயணம், இன்று மாமன்னன் வரை பல்வேறு மாபெரும் ஹிட் பாடல்களை கொடுத்து மவுசு குறையாத இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஏ.ஆர்.ரகுமானின் வாரிசுகளும் இசையின் மீது ஆர்வம் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன், பாடகராக கலக்கி வருகிறார். சுயாதீன இசை ஆல்பங்களை உருவாக்கி உள்ள அமீன், ஏ.ஆர்.ரகுமான் இசையிலும் சில பாடல்களை பாடி இருக்கிறார். அதேபோல் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகளான கதீஜா ரகுமானும் எந்திரன் தொடங்கி பொன்னியின் செல்வன் 2 வரை பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் பாடி இருக்கிறார். இவருக்கு கடந்தாண்டு தான் திருமணம் நடைபெற்றது. ரியாசுதீன் ஷேக் என்கிற சவுண்ட் இன்ஜினியரை தான் கதீஜா திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... எதோ வேலை நடக்கனும்னு தான போனாங்க; அப்போ போயிட்டு, இப்போ வைரமுத்து மீது புகார் கூறுவது ஏன்? பிரபல நடிகை காட்டம்
இந்நிலையில், தற்போது ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி உள்ள மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஹலீதா, மின்மினி படத்துக்காக திறமைமிக்க கதீஜா ரகுமானுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. சிறந்த பாடகி மட்டுமல்ல, இவர் சிறந்த இசையமைப்பாளரும் கூட. சிறந்த இசை வந்துகொண்டிருக்கிறது என குறிப்பிட்டு, கதீஜா உடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஹலிதா.
தமிழ் சினிமாவே ஆவலோடு காத்திருக்கும் படங்களில் ஒன்று தான் மின்மினி. ஏனெனில் இந்த படத்தின் படப்பிடிப்பை கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கினார் ஹலிதா. இதில் சிறுவர்களாக நடித்தவர்கள் வளர்வதற்காக 6 ஆண்டுகள் காத்திருந்து எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் ஹலிதா. இப்படத்தை காண ஆவலோடு இருப்பதாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட ஒரு பேட்டியில் கூறி இருப்பார். அத்தகைய பெருமைமிக்க படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ளதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் பணக்கார நடிகைகள் யார்... அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு? - முழு விவரம் இதோ