Box Office: நேற்று வெளியான அநீதி மற்றும் கொலை படத்தின் முதல் நாள் வசூல்!
இந்த வாரம் திரையரங்கில் வெளியான, அநீதி, கொலை மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு வாரமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் விதமாக, வித்தியாசமான கதைக்களத்தில் பல்வேறு படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் மூன்று படங்கள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த வாரம் வெளியான சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படமும் பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த வாரம், மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'கொலை', 'அநீதி' மற்றும் 'சத்திய சோதனை' ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மூன்று படங்களுமே... விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படங்களில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அநீதி:
எதார்த்தமான கதைகளத்தில், சாதாரண மனிதர்களை பற்றிய படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் 'அநீதி'. இதுவரை திரையுலகில் பேசப்படாத புது கதையையும், புதிய பிரச்சனையையும் எதிரொலிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளில் 80 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
கொலை
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, வெளியாகி உள்ள திரைப்படம் 'கொலை' . இந்த படத்தை பாலாஜி கே குமார் இயக்கி உள்ளார். ரித்திகா சிங், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், ஒரு கொலையின் தேடலை மையமாக வைத்து, இன்வெஸ்டிகேஷன் திரில்லராக வெளியாகி உள்ளது. பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த திரைப்படம், முதல் நாளில் 40 முதல் 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சத்திய சோதனை:
பிரேம் ஜி-யின் வழக்கமான காமெடி கலந்த கலாட்டா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் சத்திய சோதனை. கொலை செய்யப்பட்ட செய்தியை தெரிவிக்க போலீசுக்கு போன் செய்யும் பிரேம் ஜி-யே அந்த கொலை வழக்கில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து எப்படி பிரேம்ஜி மீண்டு வருகிறார் என்பதை கலகலப்பாக கூறியுள்ள திரைப்படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தை 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தை இயக்கி, பல்வேறு விருதுகளை பெற்று கவனம் பெற்ற இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கி உள்ளார். இந்த படம் முதல் நாளில் 20 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.