- Home
- Cinema
- அஜித் பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயமா? ரசிகர்கள் தொடங்கிய புதிய கட்சியால் எழுந்த சர்ச்சை; கொந்தளிக்கும் இணையவாசிகள்!
அஜித் பெயரை பயன்படுத்தி அரசியல் ஆதாயமா? ரசிகர்கள் தொடங்கிய புதிய கட்சியால் எழுந்த சர்ச்சை; கொந்தளிக்கும் இணையவாசிகள்!
அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன் என அஜித்குமார் பலமுறை தெளிவாகக் கூறிவிட்ட பிறகும், உளுந்தூர்பேட்டையில் ரசிகர்கள் ஒன்றிணைந்து 'தமிழக மக்கள் கழகம்' என புதுக் கட்சி தொடங்கியுள்ளனர்.

கொடியுடன் புதிய கட்சி தொடங்கிய அஜித் ரசிகர்கள்
தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்கள் அரசியல் களத்தில் இறங்குவது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால், எனக்கு அரசியலே வேண்டாம்; படத்தைப் பாருங்கள், உங்க குடும்பத்தைக் கவனியுங்கள் எனப் பொதுவெளியில் திட்டவட்டமாகக் கூறிய நடிகர் அஜித்குமாரின் பெயரில், அவரது ரசிகர்கள் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பது தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற நிகழ்வில், அஜித் ரசிகர்கள் கூடி தமிழக மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் அமைப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளனர்.
அஜித்துக்காக காலியாக உள்ள பொதுச்செயலாளர் பதவி!
புதிய கட்சியின் தொடக்க விழாவில் அனைவரது புருவங்களையும் உயர்த்திய ஒரு விஷயம் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பதவிதான்! அந்தப் பொறுப்பிற்கு நிர்வாகிகள் யாரையும் நியமிக்கவில்லை. அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் விருப்பம். அவர் எப்போது அரசியலுக்கு வந்தாலும் இந்தப் பதவியை அவரே ஏற்க வேண்டும் என்பதற்காகவே பொதுச் செயலாளர் பதவியை அவருக்காகக் காலியாக வைத்திருக்கிறோம் என நிர்வாகிகள் வெளிப் படையாகத் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் புதிய நிர்வாகிகள் யார் யார்? தமிழகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்களை ஒருங்கிணைத்துச் செயல்படும் நோக்கில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு முதற்கட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத் தலைவர்: ஆபித்
மாநிலச் செயலாளர்: ராம்குமார்
மாநிலப் பொருளாளர்: முகம்மது ஷா
மேலும், அமைப்புச் செயலாளர், கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2 சிறுத்தைகளுடன் கூடிய புதிய கொடி அறிமுகம்!
கட்சியின் அடையாளமாகப் புதிய கொடியும் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கொடியின் நடுவே 2 சிறுத்தைகள் இடம்பெற்றுள்ளன. தமிழக மக்கள் கழகத்தின் அதிகாரப்பூர்வ அடையாளமாக இந்தக் கொடி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதர்சனம் என்ன? அஜித் அரசியலுக்கு வருவாரா?
ரசிகர்கள் தங்கள் பாசத்தை வெளிப்படுத்திக் கட்சியைத் தொடங்கிவிட்டாலும், அஜித்குமாரின் தனிப்பட்ட நிலைப்பாடு இதற்கு நேர்மாறானது. அஜித் இதுவரை அரசியலில் நேரடியாக ஈடுபடப்போவதாக எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மாறாக, அரசியலில் தனக்குச் சிறிதும் விருப்பமில்லை என்பதைத் தனது அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் மூலம் பல்வேறு காலகட்டங்களில் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, ரசிகர்கள் புதிய அமைப்பைத் தொடங்கிவிட்டதால் அஜித்குமார் அரசியலுக்கு வந்துவிடுவார் என எடுத்துக்கொள்ள முடியாது; இது முழுக்க முழுக்க ரசிகர்களின் தனிப்பட்ட விருப்பமே தவிர, அஜித்தின் அரசியல் வருகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்ல.
அடுத்தகட்ட நகர்வு என்ன?
கட்சியின் கொள்கைகள், கட்டமைப்பு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்த விரிவான விவரங்கள் அடுத்தகட்டத்தில் அறிவிக்கப்படும் என நிர்வாகிகள் கூறியுள்ளனர். அதேசமயம், தனது பெயரைப் பயன்படுத்தி ரசிகர்கள் தொடங்கி உள்ள இந்த அரசியல் முயற்சிக்கு அஜித் தரப்பிலிருந்து ஆதரவோ அல்லது வழக்கம்போல மறுப்பு அறிக்கையோ வெளியாகுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

