விஜய் படத்தால் சறுக்கிய நெல்சன் ரஜினி படத்தில் உயர்ந்து நிற்கிறாரா?... ஜெயிலர் ரிசல்ட் என்ன?
விஜய்யின் பீஸ்ட் பட தோல்விக்கு பின்னர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில். அதன் ரிசல்ட் என்ன என்பதை பார்க்கலாம்.
நெல்சன் என்றாலே ஜாலியான டைரக்டர் என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த ஜாலியான மனிதருக்குள்ளும் பல வலிகள் ஒளிந்திருக்கின்றன. திரையுலகில் வெற்றியடைவது அவ்வளவு எளிதல்ல என்பதற்கு நெல்சனின் பயணமே ஒரு சான்று. விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி வந்த நெல்சனை, சினிமாவுக்குள் அழைத்து வந்தது சிம்பு தான். சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படம் தான் நெல்சன் இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.
கடந்த 2011-ம் ஆண்டே எடுக்கப்பட்ட இப்படம் பாதியில் நின்று போனதால், நெல்சனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் விஜய் டிவிக்கே சென்ற நெல்சன் அங்கு பிக்பாஸ், ஜோடி நம்பர் 1 போன்ற ரியாலிட்டி ஷோக்களை இயக்கினார். முதல் படம் டிராப் ஆன நெல்சனுக்கு மீண்டும் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆனது. அதுவும் முதல் படமே நயன்தாரா உடன், நெல்சனின் திறமையை பார்த்து வியந்துபோன அனிருத் தான் அவருக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
7 ஆண்டு காத்திருப்புக்கு பின்னர் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட நெல்சன் கோலமாவு கோகிலா படம் மூலம் தன்னுடைய முழு திறமையையும் நிரூபித்து முதல் வெற்றியை ருசித்தார். இதன்பின்னர் தன்னுடைய நண்பன் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்த நெல்சனுக்கு டாக்டர் திரைப்படம் டபுள் ஹிட் ஆக அமைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடி மேல் வசூலிக்க, உடனே அவரை அழைத்து தன்னுடைய அடுத்த படத்திற்கு கமிட் செய்துவிட்டார் விஜய்.
விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நெல்சன், பீஸ்ட் படத்தில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தார். கடந்தாண்டு தமிழ் புத்தாண்டுக்கு திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்தாலும், அதன் விமர்சனங்கள் படு மோசமாக இருந்தன. இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் விஜய்யை விட அதிகளவில் ட்ரோல்களை சந்தித்தது நெல்சன் தான்.
இதையும் படியுங்கள்... ஜெயித்தாரா ஜெயிலர்?... ரஜினிக்கு கம்பேக் கொடுத்தாரா நெல்சன்? - Jailer முழு விமர்சனம் இதோ
பீஸ்ட் ரிலீசாகும் முன்பே ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்க கமிட் ஆகி இருந்தார் நெல்சன். பீஸ்ட் ரிசல்டை பார்த்துவிட்டு, நெல்சனை ஜெயிலர் படத்தில் இருந்து தூக்க பல தரப்பில் இருந்தும் ரஜினிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதை அவரே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் வெளிப்படையாக சொல்லி இருந்தார். அறிவித்த பின்னர் அவரை படத்தில் இருந்து நீக்கினால் அவரது கெரியர் என்ன ஆகும் என்பதை மனதில் வைத்து, அவரை நீக்க வேண்டாம் என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னரே ஜெயிலர் படத்தை தொடங்கி இருக்கிறார் நெல்சன். இப்படம் மூலம் கம்பேக் கொடுக்க வேண்டும் அதுமட்டுமின்றி ரஜினியும் அண்ணாத்த படம் தோல்வி அடைந்ததால், அவருக்கும் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தோடு இருந்த நெல்சன், ஒருவழியாக படத்தை எடுத்து வெற்றிகரமாக திரைக்கு கொண்டு வந்துவிட்டார்.
இன்று ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதன்மூலம் நெல்சன் கம்பேக் கொடுத்தாரா என்பதை தெரிந்துகொள்ள தான் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். உண்மையை சொல்லப்போனால் இந்த முறை நெல்சனின் குறி மிஸ் ஆகவில்லை. ரஜினியை வைத்து காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட், டான்ஸ் என ஒரு பக்கா கமர்ஷியல் படமாக ஜெயிலர் படத்தை கொடுத்திருக்கிறார் நெல்சன்.
பீஸ்ட்டில் மிஸ் ஆன வெற்றியை இப்படத்தின் மூலம் மீண்டும் பெற்று மாஸ் ஆன கம்பேக் கொடுத்திருக்கிறார் நெல்சன். நெல்சன் செய்துள்ள இந்த தரமான சம்பவத்தால் இன்னும் சில வாரங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் ராஜ்ஜியம் தான் என்பது உறுதியாக தெரிகிறது. தமிழ் சினிமாவுக்கு எட்டாக் கனியாக இருக்கும் ரூ.1000 கோடி வசூலை ஜெயிலர் எட்டிப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... " தலைவரு நிரந்தரம்” களைகட்டும் ஜெயிலர் கொண்டாட்டம்.. சிங்கப்பூரில் மாஸ் காட்டிய ரஜினி ரசிகர்கள்..