- Home
- Cinema
- Actress Roja : நடிகை டூ அமைச்சர்... ஆந்திர அரசியலில் சிங்கப்பெண்ணாய் வலம் வரும் நடிகை ரோஜாவின் சாதனைப் பயணம்
Actress Roja : நடிகை டூ அமைச்சர்... ஆந்திர அரசியலில் சிங்கப்பெண்ணாய் வலம் வரும் நடிகை ரோஜாவின் சாதனைப் பயணம்
Actress Roja : திரையுலகில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கி அரசியலில் பல்வேறு தடைகளை கடந்து இன்று சிங்கப்பெண்ணாய் அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் நடிகை ரோஜாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

1972-ல் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நாகராஜ ரெட்டிக்கும், லலிதாவுக்கும் ஒரே மகளாக பிறந்தார் ரோஜா. கல்லூரி விழாவில் ரோஜாவின் நடனத்தை பார்த்த ஆந்திர திரையுலகின் முக்கியப் புள்ளி ஒருவர், தெலுங்கு திரைப்படம் ஒன்றில் ரோஜாவை கதாநாயகியாக நடிக்க வைப்பதற்கு ரோஜாவின் குடும்பத்தை அனுகினார். சினிமாவில் ஆர்வம் இல்லாமல் இருந்த ரோஜா, தந்தையின் அறிவுரையின் பேரிலே சினிமாவில் நடிக்க சம்மதித்தார்.
அதன்படி முதலாவதாக பிரேமா தபாசு என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் ரோஜா. ஆனால் இப்படம் தோல்வியடைந்தது. பின்னர் தமிழில் செம்பருத்தி படத்தில் பிரசாந்த்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்தார் ரோஜா. இந்த படத்தில் நடிக்கும் போதுதான் ரோஜாவிற்கும் இப்படத்தின் இயக்குனர் ஆர்.கே.செல்வமணிக்கும் இடையே காதல் மலர்ந்தது.
நடிகை ரோஜாவுக்கு திரையுலகில் திருப்புமுனையை தந்த படம் என்றால் அது விக்ரம் இயக்கத்தில் கடந்த 1998-ம் ஆண்டு வெளியான உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் திரைப்படம் தான். திரையுலகுக்குள் நுழைந்து சில வருடங்களுக்குள்ளாகவே ரஜினிகாந்த்துடன் உழைப்பாளி மற்றும் வீரா ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரோஜா.
இவ்வாறு அடுத்தடுத்து திரையுலகில் வெற்றிக்கனியை ருசித்து வந்த நடிகை ரோஜா கடந்த 1999-ம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார். சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகை ரோஜா. அங்கு சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த ரோஜா பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டார்.
அக்கட்சியின் மூலம் கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிகண்டார் ரோஜா. ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்றதும் நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தனது ஆட்சியில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறி இருந்தார். அதன்படி தற்போது அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பதவியில் இருந்த 24 அமைச்சர்கள் பதவி விலகிய நிலையில், புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த புதிய அமைச்சரவையில் நடிகை ரோஜாவுக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது. திரையுலகில் நடிகையாக தனது பயணத்தை தொடங்கி அரசியலில் பல்வேறு தடைகளை கடந்து இன்று சிங்கப்பெண்ணாய் அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் நடிகை ரோஜாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... அல்டிமேட்னு சொல்லி ஆப்பு வச்சுட்டீங்களே பிக்பாஸ்... டைட்டில் ஜெயிச்ச பாலாவுக்கு இவ்வளவு தான் பரிசுத் தொகையா?