திருட்டு விவகாரம்: தவறாக செய்தி வெளியிடும் ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு - நடிகை பார்வதி நாயர் எச்சரிக்கை!
நடிகை பார்வதி நாயர் வீட்டில் சமீபத்தில் சில விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனதாக அவர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், இந்த விவகாரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து தற்போது எச்சரிக்கும் விதமாக நடிகை பார்வதி நாயர் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகை பார்வதி நாயரின் வீட்டிலிருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரியும் நபர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருக்கிறது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக செய்தி வெளியிட்டிருக்கும் சில ஊடகங்கள் நடிகை பார்வதி நாயரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் அவதாறான செய்திகளை வெளியிட்டிருக்கிறது. இது போன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால், வெளியிடும் அனைத்து ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்கு மற்றும் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என பார்வதி நாயர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே நடிகை பார்வதி நாயர் வீட்டில் பணிபுரிந்த நபர், வீட்டிலிருந்து ஆறு லட்சம், மூன்று லட்சம் என லட்ச கணக்கில் மதிப்புள்ள கை கடிகாரங்களையும் மற்றும் லேப்டாப் செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் திருடி இருக்கிறார் என்பதும், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.