சரக்கு அடிச்சா தான் தூக்கம் வரும்... அந்த அளவுக்கு போதைக்கு அடிமையானேன் - மனம் திறந்த மனிஷா கொய்ராலா
மதுவுக்கு அடிமையானது பற்றியும், தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு பற்றியும் நடிகை மனிஷா கொய்ராலா மனம்திறந்து பேசி உள்ளார்.
தமிழ்நாட்டில் பாலிவுட் நடிகைகள் பெரிய அளவில் சாதித்ததில்லை. அப்படி சாதித்த நடிகைகளையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை என்றால் அது மனிஷா கொய்ராலா தான். இவரை தமிழில் அறிமுகப்படுத்தியது மணிரத்னம் தான். அவர் இயக்கிய பம்பாய் படம் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் மனிஷா.
முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த மனிஷாவுக்கு அடுத்ததாக கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் ஷங்கரின் இந்தியன் திரைப்படம். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்த மனிஷாவின் நடிப்பு திறமையை பார்த்து வியந்துபோன ஷங்கர், தனது அடுத்த படமான முதல்வனிலும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பளித்தார்.
முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்த மனிஷா கொய்ராலாவுக்கு அடுத்ததாக பாபா படத்தில் ரஜினியுடன் ஜோடிசேரும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் கமலுடனும் மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான் என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த இவர் அதன்பின் தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பின்னர் கடந்த 2011-ம் ஆண்டு ரிலீசான மாப்பிள்ளை படத்தில் தனுஷின் மாமியாராக நடித்தார். அதன்பின் இவர் எந்த தமிழ்படத்திலும் நடிக்கவில்லை.
இதையும் படியுங்கள்... இது வீடில்ல.. மாடர்ன் அரண்மனை! பிரம்மிப்பூட்டும் நடிகர் நெப்போலியனின் அமெரிக்கா வீடு- அதற்குள் இத்தனை வசதிகளா?
சாம்ராட் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மனிஷா கொய்ராலா, பின்னர் சில ஆண்டிலேயே அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். இதுதவிர புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, சிகிச்சைக்குபின் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தான் மதுவுக்கு அடிமையானது குறித்து பேசியுள்ளார் மனிஷா கொய்ராலா. அதில் அவர் கூறியதாவது : “கேமரா முன் தைரியமா நடிப்பதற்காக மது குடிக்க ஆரம்பித்தேன். நாளடைவில் அதுவே பழக்கமாக மாறிவிட்டது. மது அருந்தவில்லை என்றால் தூக்கமே வராது என்கிற அளவுக்கு மதுவுக்கு அடிமையாகிவிட்டேன். அந்த மதுப்பழக்கத்தால் எனது வாழ்க்கையும் நாசமானது. பின் புற்றுநோய் பாதிப்பால் தான் வாழ்க்கையின் பாடத்தைக் கற்றுக்கொண்டேன்” என மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... துணிவு கெட்-அப்பில் அஜித்துக்கு சிலை வைத்த வெறித்தனமான ரசிகர் - வைரலாகும் போட்டோ