குழந்தைங்கள நாய் கடிச்சு கொதர்ர வரைக்கும் பெத்தவங்க எங்க போனீங்க? நடிகை அம்மு கேட்கிறார்
நாய்கள் குழந்தைகளை கடிக்கும் வரை பெற்றோர்கள் என்ன செய்தீர்கள் என நடிகை அம்மு ராமச்சந்திரன் பேட்டி ஒன்றில் பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

Ammu Ramachandran About Stray Dogs
தெருநாய்களை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்றும் அதற்கு முறையான தடுப்பூசி போடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது ஏற்பட்ட விவாதத்தைக் காட்டிலும் சமீபத்தில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்கள் பற்றிய விவாதம் நடந்த பின்னர் சமூக வலைதளாங்களில் அது ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக அந்நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசிய சின்னத்திரை நடிகை அம்மு மற்றும் நடிகர் படவா கோபி ஆகியோரை நெட்டிசன்கள் சரமாரியாக ட்ரோல் செய்து வருகிறார்கள். இதற்கு அவர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
நீயா நானா மீது புகார்
நீயா நானா நிகழ்ச்சி மொத்தம் 8 மணிநேரம் ஷூட்டிங் நடத்தப்பட்டு, அதில் வெறும் 45 நிமிடங்கள் தான் உங்களுக்கு காட்டப்பட்டுள்ளது என்றும், தங்கள் தரப்பில் பேசிய நிறைய விஷயங்களை எடிட் செய்துவிட்டதாகவும், நிறைய இடங்களில் தங்களை பேசுவதற்கே அனுமதிக்கவில்லை என்றும் படவா கோபி மற்றும் நடிகை அம்மு ஆகியோர் அடுத்தடுத்து வீடியோ வெளியிட்டனர். அதுமட்டுமின்றி அந்நிகழ்ச்சியின் எடிட் செய்யப்படாத வெர்ஷனை ஒளிபரப்ப வேண்டும் என்று இருவருமே வலியுறுத்தினர். இது ஒருபுறம் இருக்க நடிகை அம்மு யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டி தற்போது செம வைரலாகி வருகிறது.
அம்மு அபிராமி எழுப்பிய கேள்விகள்
அதில் அவர் கூறியதாவது : எனக்கு இருக்குற கோபமான விஷயம் என்னவென்றால். குழந்தைகளை நாய் கடிச்சு கொதர்ர வரை பெற்றோர்கள் எங்க போனீங்க. அங்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எங்க போனீங்க. அந்த குழந்தைங்களுடைய அழுகை சத்தம் உங்களுக்கு கேட்கவே இல்லையா? சாதாரணமாக ஒரு நாயை விரட்டக் கூடியவர்கள், அது குழந்தையை கடிக்கும் வரை என்ன செய்தார்கள். சாதாரணமாக எங்களுடைய நாலு கால் இருக்கும் ஜீவன் வித்தியாசமாக கத்தினாலே நாங்கள் ஓடி வந்து பார்ப்போம். ஒரு குழந்தை நாய்க் கடியால் கதறுகிறது என்றால் அதை பார்த்துக் கொண்டு சும்மாவா இருந்தீங்க. அந்த குழந்தையை காப்பாத்தனும்னு யாருக்குமே தோனலையா. இதற்கு உங்களிடம் பதில் இருந்தால் எல்லாவற்றிற்குமே பதில் இருக்கும் என பேசி இருக்கிறார் அம்மு.
கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
அம்முவின் இந்த பேச்சைக் கேட்ட நெட்டிசன்கள் மேலும் கொந்தளித்துள்ளனர். நீங்க கிச்சன்ல பிஸியா இருக்கீங்க உங்க குழந்தை பந்து வச்சி விளையாடுது அப்ப அந்த பந்து தெருவுக்கு போயிடுது உங்க குழந்தை ஓடிப்போய் அதை எடுக்கும்போது தெரு நாய் உங்க குழந்தையை கடிச்சுடுது, அப்போ உங்களை பார்த்து நீங்களே இந்த கேள்வியை கேப்பீங்களா அம்மு மேடம்? ஏன் குழந்தைங்க தெருவுக்கே போகக் கூடாதா? மற்ற குழந்தைகளோடு தெருவில் விளையாடவே கூடாதா? என அம்முவிடம் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.