விஜய் திரையுலகில் நுழைந்து 30 வருடங்கள்! அரசு மருத்துவமனையில் 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய ரசிகர்கள்
தளபதி விஜய் 30 வருட சினிமா பயணத்தை சிறப்பிக்கும் விதமாக அவருடைய ரசிகர்கள் 30 பச்சிளம் குழந்தைகளுக்கு 30 தங்க மோதிரங்களை வழங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய், கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான 'வெற்றி' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து, குடும்பம், நான் சிகப்பு மனிதன், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த விஜய் தற்போது கதாநாயகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதனை அவரது ரசிகர்கள் உச்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
விஜய் தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 'நாளைய தீர்ப்பு' என்கிற படத்தின் மூலம் கடந்த 1992 ஆம் ஆண்டு கதாநாயகனாக திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, போன்ற பல படங்களில் நடித்தார். விஜய்யின் தந்தை ஒரு இயக்குனர் என்பதால், இவருக்கு பட வாய்ப்புகள் எளிதில் கிடைத்தாலும்... எந்தவித விமர்சனங்களையும் சந்திக்காமல் இந்த இடத்தை அவர் எட்டிப்பிடித்து விட வில்லை.
விஜய்யின் ஆரம்ப கால நடிப்பு மற்றும் அவரது தோற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்த போதிலும், அவை அனைத்தையும் தன்னுடைய பாடமாக ஏற்றுக்கொண்டு, இன்று உலக அளவில் ரசிகர்கள் அனைவராலும், அதிகம் நேசிக்கப்படும் ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார்.
'ரசிகன்' படத்தின் மூலம், இளைய தளபதி என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்ட விஜய், தற்போது தளபதி என்று அவருடைய ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். தன்னுடைய ரசிகர்கள் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வரும் விஜய், கதாநாயகனாக அறிமுகமாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இதை முன்னிட்டு அவருடைய ரசிகர்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு உதவிகளை செய்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சென்னையில் அடையாறு மருத்துவமனையில் பிறந்த 30 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் புத்தாடைகளை, தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வழங்கியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, விஜய் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.