Actor Sri : கம் பேக் கொடுத்த நடிகர் ஸ்ரீ? அவரே வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி
நடிகர் ஸ்ரீ தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Actor Shri Novel ‘May I Come In?’
சில படங்களே நடித்திருந்தாலும் திரையுலகில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் நடிகர்கள் சிலர் மட்டுமே. அவர்கள் திரைத்துறையில் இருந்து காணாமல் போன பிறகு அவர்கள் எங்கே என ரசிகர்கள் தேடுவதுண்டு. அந்த வரிசையில் நல்ல படங்களில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீ, சில ஆண்டுகளாக காணாமல் போயிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அவரின் சமூக வலைதள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. யாருமே இல்லாத வீட்டில் தனியாக சமைத்துக் கொண்டும், உடல் எடையை மிகவும் மெலிந்து விலா எலும்புகள் வெளியே தெரியும் வண்ணம் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப் போயிருந்தார். மேலும் தலை முடிக்கு வண்ணம் அடித்துக் கொண்டு, மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற போன்ற தோற்றத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
படங்களுக்காக ஸ்ரீ செய்த முயற்சிகள்
நடிகர் ஸ்ரீ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்கிற சீரியலின் மூலமாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் ‘வழக்கு எண் 18/9’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக ராமாபுரத்தில் உள்ள சாலையோர உணவகங்களுக்கு சென்று அவர்களின் வாழ்க்கை முறை பற்றி நன்கு அறிந்து அதன் பின்னரே நடித்திருந்தார். படத்தில் தன் கதாபாத்திரம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக அவர் செய்த அந்த முயற்சி பாராட்டுகளைப் பெற்றது. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘சோன்பப்படி’ ‘வில் அம்பு’, ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் ‘மாநகரம்’ புதுமுக இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் மற்றும் வெற்றி திரைப்படமாகும்.
நடிகர் ஸ்ரீ வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி
‘மாநகரம்’ திரைப்படத்தில் சென்னையில் வசிக்கும் ஒரு விரக்தியடைந்த இளைஞராக ஸ்ரீ நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ‘மாநகரம்’ திரைப்படம் அந்த ஆண்டில் வெளியான லாபகரமான படங்களில் ஒன்றாக மாறியது. பின்னர் ஸ்ரீ பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் சில நாட்களிலேயே அந்த போட்டியில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு ‘இறுகப்பற்று’ படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின்னர் அவர் திரையுலகில் இருந்து காணாமல் போனார். அவர் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ற எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் 2025 ஏப்ரல் மாதம் ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஸ்ரீ உடல்நிலை குறித்து பரவிய வதந்திகள்
உடல் எடை மிகவும் மெலிந்து, தலையில் வண்ண நிறங்களுடன், சில ஆபாசமான அசைவுகளுடன் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரின் உடல் நலனை கவனித்த சில மருத்துவர்கள், அவர் கடுமையான மன நெருக்கடியில் இருக்கலாம் என்றும், காச நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினர். மேலும் அவர் வீட்டில் தனியாக இருப்பது போலவும், தானே சமைத்து உண்பது போலவும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். அவரின் இந்த வீடியோக்களை பார்த்த பலரும் அவர் போதைகளுக்கு அடிமையாகி விட்டார் என்றும், மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர். அவருடன் பணியாற்றிய நடிகர்கள் அவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை, போன் செய்தாலும் எடுப்பதில்லை என்று கூறினர்.
ஸ்ரீயை மீட்ட லோகேஷ் கனகராஜ்
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்த நடிகர் ஸ்ரீ, 2024 ஆம் ஆண்டு புத்தாண்டிலிருந்து சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டதாகவும், தான் எந்த போதைக்கும் அடிமையாகவில்லை என்றும் அவர் விளக்கமளித்து இருந்தார். அதன் பின்னர் அவரை வைத்து ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜிடம் ஸ்ரீயின் நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஸ்ரீயை தொடர்புகொள்ள முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், அவரை மீட்டு அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறிய போது, ஸ்ரீயை கண்டுபிடித்து விட்டதாகவும் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
புத்தகம் எழுதிய ஸ்ரீ
சில மாதங்களாக ஸ்ரீ குறித்தும், அவரின் நிலை குறித்தும், அவர் எடுத்து வரும் மருத்துவ விவரங்கள் குறித்தும் எந்தவிதமான தகவல்களும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் மூன்று மாத இடைவெளிக்குப் பின்னர் தற்போது ஸ்ரீ மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் ‘May I Come In’ என்கிற நாவலை ஸ்ரீ எழுதியிருப்பதாக அறிவித்திருக்கிறார். ஜூன் 18 2025 அன்று தன்னுடைய முதல் நாவலை உலகிற்கு பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி என்றும், அமேசான் கிண்டில் தளத்தில் இந்த புத்தகம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். நடிகர் ஸ்ரீ மீண்டு வந்ததில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர் பழைய நிலைக்கு வர வேண்டும், தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் விரும்பினர். அதை ஸ்ரீ நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது ஸ்ரீ எழுதியுள்ள நாவல் வெற்றியடைய வேண்டும் என்று பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
நடிகர் ஸ்ரீ சந்தித்த பிரச்சனைகள்
நடிகர் ஸ்ரீ தனது திரைப்பயணத்தில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக முன்பு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். நடிகராக தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்ததாக அவர் கூறியிருந்தார். தன் தாயாருக்கு உடல்நிலை குன்றிய போது மருத்துவச் செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதாகவும், நண்பர்கள் உறவினர்களின் உதவியுடன் தான் தாயாரின் மருத்துவ செலவுகளை கவனித்துக் கொண்டதாகவும் வருத்தத்துடன் பேசியிருந்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் ஒரு கட்டத்தில் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் கூட வந்ததாக வெளிப்படையாக கூறியிருந்தார்.