Sarath Babu Passed Away : செப்சிஸ் நோய் பாதிப்பு... சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நடிகர் சரத்பாபு
செப்சிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 71.
தமிழ் சினிமாவில், இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'பட்டினப்பிரவேசம்' திரைப்படத்தின் மூலம், அறிமுகமானவர் சரத்பாபு. இவரின் அழகும், நேர்த்தியான நடிப்பும், இவருக்கு தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று தந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து இவர் நடித்த 'முத்து', 'அண்ணாமலை', போன்ற திரைப்படங்கள் இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த சரத்பாபு, கடந்த சில மாதங்களாகவே செப்சிஸ் என்கிற அரிய வகை பாதிப்பு காரணமாக, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் இவருடைய உடல்நலம் குறித்த தகவல் வெளியான போது, அவருடைய உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கி விட்டதாகவும், எனவே ஐசுயுவில் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சற்று முன்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் மரணமடைந்ததாக செய்தி பரவியது. பின்னர் அவரது குடும்பத்தினர் அது வெறும் வதந்தி என கூறியதோடு, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
பின்னர் இரு வார காலமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த சரத் பாபு இன்று காலமானார். அவருக்கு வயது 71. நடிகர் சரத்பாபுவின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.