Simbu: நீண்ட போராட்டம்... 20 வருட ஹீரோ வாழ்க்கையில் 11 ஆண்டுகளுக்கு பின் சிம்புவுக்கு 'மாநாடு' கொடுத்த வெற்றி!
நடிகர் சிம்பு (simbu) நடிப்பில் நவம்பர் 25 ஆம் தேதி வெளியான 'மாநாடு' படத்தின் மூலம், சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி கனியை ருசித்துள்ளார் சிம்பு. நீண்ட போராட்டத்திற்கு பின்னர் கிடைத்துள்ள இந்த வெற்றியால், சிம்பு மட்டும் இன்றி ஒட்டுமொத்த படக்குழுவும் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
பொதுவாகவே வாரிசு நடிகர்கள் என்றால், அவர்களுக்கு திரையுலகில் நுழைவதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைத்தாலும், ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் நடிகர் சிம்பு, 1984 ஆம் ஆண்டு... தன்னுடைய தந்தை திரைக்கதை, இயக்கத்தில் வெளியான 'உறவு காத்த கிளி' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய மழலை பேச்சாலும், சிரிப்பாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதை தொடர்ந்து, 'மைதிலி என்னை காதலி', 'ஒரு தாயின் சபதம்', 'எங்க வீட்டு வேலன்', 'சபாஷ் பாபு', உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் சிம்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்ட படங்களாகும்.
பின்னர் தன்னுடைய படிப்பின் மீது கவனம் செலுத்துவதற்காக சில காலம் திரையுலகை விட்டு விலகிய சிம்பு, மீண்டும், 'சொன்னால் தான் காதலா' மற்றும் 'காதல் வைரஸ்' ஆகிய படங்களில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
யங் ஹீரோ லுக்கில், மாறிய சிம்புவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர துவங்கியது. அந்த வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான, 'காதல் அழிவதில்லை' படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தில் நடிகை சார்மி ஹீரோயினாக நடித்திருந்தார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே... சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதைதொடர்ந்து, காதல் மற்றும் ஆக்ஷன் கதைகளை மையமாக கொண்ட படங்களையே அதிகம் தேர்வு செய்து நடிக்க துவங்கினார். அந்த வகையில் இவர் அடுத்தடுத்து நடித்த 'தம்', 'அலை', 'கோவில்', குத்து', 'மன்மதன்', 'வல்லவன்' என அடுத்தடுத்து படங்கள் ஹிட்டாகியது.
இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் பெறுக துவங்கியது. குறிப்பாக சிம்புவிற்கு தற்போது வரை பெண் ரசிகைகள் அதிகமாகவே உள்ளனர்.
ஏற்கனவே பிரபல நடிகரின் மகளை சிம்பு காதலித்து அந்த காதல் தோல்வியடைந்ததாக கோலிவுட் திரையுலகில் ஒரு கிசுகிசுப்பு வந்த நிலையில், வல்லவன் படத்திற்கு பின்னர் நயன்தாராவை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இருவரின் முத்த புகைப்படங்களும் வெளியாகி இந்த தகவலை உறுதி செய்த நிலையில் திடீர் என இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது.
இந்த காதல் தோல்விக்கு பின்னர், சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான, 'விண்ணை தாண்டி வருவாயா' திரைப்படம், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் பல படங்கள், மற்றும் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும் இவர் நடிப்பில் வெளியான எந்த படமும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரவில்லை.
தற்போது சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் வெட்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்திற்கு தான் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பல சர்ச்சைகளுக்கு பின் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த படத்தின் வெற்றியை படக்குழுவும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.