TNPSC Group 2 ரிசல்ட் வெளியீடு! மெயின் தேர்வில் அதிரடி மாற்றம்! தேர்வர்கள் கவனத்திற்கு!
TNPSC Group 2 Result 2025: குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் குரூப் 2 முதன்மைத் தேர்வு முறையையும் டிஎன்பிஎஸ்சி அதிரடியாக மாற்றியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.
குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வு
இதற்கிடையே சார் பதிவாளர், இளநிலைவேலைவாய்ப்பு அலுவலர், வனவர் பதவிகள் அடங்கிய குரூப் 2 மற்றும் 2ஏ பணியிடங்களை நிரப்ப கடந்த 5.07.2025 அன்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிக்கை வெளியிட்டது. இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 28.09.2025 அன்று நடைபெற்றது. இந்த தேர்வை 4,20,217 தேர்வர்கள் எழுதினர்.
முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு
இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்து இருந்த நிலையில், இன்று (டிசம்பர் 22) குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் மொத்தம் 10,583 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் குரூப் 2 முதல்நிலை தேர்வில் 1,126 பேரும், குரூப் 2ஏ முதல் நிலை தேர்வில் 9,457 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ரிசல்ட் எப்படி பார்ப்பது?
தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல்கள் தேர்வாணைய வலைதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. குரூப் 2 மற்றும் 2ஏ முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்து முதன்மை தேர்வு நடைபெறும்.
இதற்கிடையே குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு (கொள்குறி வகை), தாள் II (பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு) கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிக்கையில் (Notificatication) ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதன்மைத் தேர்வு முறை அதிரடி மாற்றம்
ஆனால், நிர்வாகக் காரணங்களுக்காக தொகுதி IIA பணிகளின் தாள்-II -ற்கான முதன்மைத் தேர்வு OMR முறையில் நடத்தப்படும் என தற்போது டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வர்கள் மேலும் விவரங்களுக்கு தேர்வாணைய வலைதளத்தினை (www.tnpsc.gov.in) பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம்.

