- Home
- Career
- RRB Recruitment: 10-ம் வகுப்பு படித்தவர்களே ரெடியா? ரயில்வேயில் 6,565 வேலைகள்... ஜூன் 30 முதல் விண்ணப்பம்!
RRB Recruitment: 10-ம் வகுப்பு படித்தவர்களே ரெடியா? ரயில்வேயில் 6,565 வேலைகள்... ஜூன் 30 முதல் விண்ணப்பம்!
RRB Recruitment: ரயில்வேயில் நிரந்தர அரசு வேலை பெற விரும்புவோருக்கு இது நல்ல வாய்ப்பாகும். தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் கடைசி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.

10ம் வகுப்பு வேலை
அரசு வேலைக்கு காத்திருக்கும் இளைஞர்களுக்கு மத்திய ரயில்வே பணியாளர் வாரியம் (RRB) முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு ரயில்வே மண்டலங்களில் 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஜூன் 30 அன்று வெளியாகிறது. அதே நாளில் தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 29, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
இதில் டெக்னீஷியன் கிரேடு-1 சிக்னல் பணியிடங்கள் மற்றும் டெக்னீஷியன் கிரேடு-3 பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதுடன் ஐடிஐ அல்லது சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ, பி.எஸ்.சி. உள்ளிட்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கிரேடு-1 பணியிடங்களுக்கு வயது 18 முதல் 33 வரை, கிரேடு-3 பணியிடங்களுக்கு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் கிரேடு-1 பணியாளர்களுக்கு மாதம் ரூ.29,200 அடிப்படை சம்பளமும், கிரேடு-3 பணியாளர்களுக்கு ரூ.19,900 அடிப்படை சம்பளமும் வழங்கப்படும்.
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், செகந்திராபாத், அகமதாபாத், அஜ்மேர், போபால், பாட்னா, ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது நாடு முழுவதும் அரசு வேலை தேடுபவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளது.
விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டியது
மண்டல வாரியான காலிப்பணியிடங்கள், கல்வித் தகுதி, தேர்வு முறை, பாடத்திட்டம், விண்ணப்பக் கட்டணம், ஒதுக்கீடு உள்ளிட்ட முழுமையான தகவல்கள் ஜூன் 30 அன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெறும். விண்ணப்பிக்கும் முன் அனைத்து விவரங்களையும் கவனமாக படித்து, காலக்கெடுவுக்குள் விண்ணப்பிப்பது அவசியம்.

