- Home
- Career
- இது தேவையா? உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக மனு! ரூ.10 லட்சம் அபராதத்தை செலுத்திய சி.வி.சண்முகம்!
இது தேவையா? உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு எதிராக மனு! ரூ.10 லட்சம் அபராதத்தை செலுத்திய சி.வி.சண்முகம்!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படம் இடம்பெற்றிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என வழக்கறிஞர் இனியன் தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் இனியன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் அரசு முத்திரையுடன் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படமும், மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டிருப்பது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டத்தை, தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துவது தவறானது. அரசியல் உள்நோக்கத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் செலவு செய்யப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது .
2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து தான் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தன்னார்வலர்கள் மூலமாக திட்டம் செயல்படுத்தப்படுவதாக கூறினாலும் திமுகவினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு, தேர்தல் பரப்புரை நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகையால் உங்களுடன் ஸ்டாலின் விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தையும், உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் இதே கோரிக்கையுடன் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக கூறி, உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.வி.சண்முகம் 10 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டதாகவும், தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனையடுத்து, வழக்கறிஞர் இனியனின் மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.