தஞ்சையில் ஒரே பைக்கில் கோயிலுக்குச் சென்ற குடும்பத்தினர் மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தஞ்சை அடுத்த வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த அறிவழகன் (37). தனது மனைவி உஷா (35). மகள்கள் ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9)., உறவுக்கார சிறுமி தேஜா ஸ்ரீ ஆகியோருடன் ஒரே பைக்கில் அறிவழகன் பனங்காடு பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்று கொண்டிருந்தார். மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் சென்ற போது கேரளாவில் இருந்து நாகூர் தர்காவிற்கு சென்று கொண்டிருந்த பக்தர்களின் கார் முன்னாள் சென்று கொண்டு இருந்த அறிவழகன் பைக் மீது வேகமாக மோதியது.
சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர்
இதில் பைக்கில் இருந்த 5 பேரும் சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யா ஸ்ரீ, தங்கை மகள் தேஜா ஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அறிவழகன் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
3 பேர் பலி
விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் துறையினர் காயமடைந்த உஷா மற்றும் சிறுமி ரூபா ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் ஓட்டுநர் கைது
இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
