இனி புக்ஸ் எல்லாம் வேணாம்.. AI போதும்! மைக்ரோசாப்ட் அதிரடி நடவடிக்கை!
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நூலகத்தை மூடி, செய்தி சந்தாக்களை ரத்து செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த 'ஸ்கில்லிங் ஹப்' மூலம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் பணிநீக்கம்
கடந்த ஆண்டு சுமார் 15,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இப்போது தனது நிறுவன கலாச்சாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஊழியர்கள் பயன்படுத்தி வந்த 'ஸ்ட்ராடெஜிக் நியூஸ் சர்வீஸ்' (SNS) உள்ளிட்ட பல முக்கிய செய்தி நிறுவனங்களின் சந்தாக்களை (Subscriptions) மைக்ரோசாப்ட் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
என்னென்ன மாற்றங்கள்?
• நூலகம் மூடல்: ரெட்மண்ட் வளாகத்தில் இயங்கி வந்த மைக்ரோசாப்ட் நூலகம் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இனி ஊழியர்களால் அங்கிருந்து புத்தகங்களை எடுத்துப் படிக்க முடியாது.
• செய்தித் தாள்கள் ரத்து: 'தி இன்ஃபர்மேஷன்' (The Information) போன்ற முன்னணி பிசினஸ் செய்தித்தாள்களின் டிஜிட்டல் அக்சஸ் ஊழியர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
• அமைதியான வெளியேற்றம்: இதற்காக எந்த ஒரு பெரிய அறிவிப்பையும் நிறுவனம் வெளியிடவில்லை. மாறாக, செய்தி நிறுவனங்களுக்கு "உங்கள் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது" என தானியங்கி மின்னஞ்சல்களை (Automated Emails) மட்டும் அனுப்பி வேலையை முடித்துள்ளது.
காரணம் என்ன?
மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எதிர்காலத்தை செயற்கை நுண்ணறிவு (AI) மயமாக மாற்றி வருகிறது. பழைய முறையில் புத்தகங்களைப் படிப்பதற்கும், செய்தித்தாள்களை வாசிப்பதற்கும் பதிலாக, 'ஸ்கில்லிங் ஹப்' (Skilling Hub) என்ற ஏஐ-ஆல் இயங்கும் தளம் மூலம் ஊழியர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று மைக்ரோசாப்ட் விரும்புகிறது.
"இது நவீன காலத்திற்கு ஏற்ற மாற்றம்" என்று நிறுவனம் கூறினாலும், காலம் காலமாகப் புத்தகங்களுடன் பணியாற்றி வந்த மூத்த ஊழியர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
சத்யா நாதெல்லாவின் கருத்து
மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, நிறுவனம் முழுமையாக ஏஐ-நோக்கி நகர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். உயர் அதிகாரிகளிடம் கூட, "இந்த புதிய சிந்தனைக்கு ஏற்றவாறு மாறத் தயாராக இருங்கள், இல்லையெனில் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி யோசியுங்கள்" என்று கறாராகக் கூறப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தகங்களின் பாரத்தாலேயே கட்டிடத்தில் விரிசல் விழுந்ததாகக் கூறப்படும் மைக்ரோசாப்ட் நூலகத்தின் வரலாறு, இப்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இனி அல்காரிதம்களும், ஏஐ கருவிகளுமே ஊழியர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகின்றன.

