ரிடையர் ஆவதற்கு முன் இந்தத் தவறுகளைச் செய்யவே கூடாது! பல வருட உழைப்பு வீணாகும்!
வயதான காலத்தில் எந்த வேலையும் செய்யாமல் வருமானம் ஈட்ட வேண்டுமானால், அதற்கு ஏற்ப பென்ஷன் திட்டம் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பலர் இதில் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள். இதுபோன்ற 5 தவறுகளைப் பற்றித் இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Senior citizen pension planning
ஓய்வூதிய திட்டமிடல் எவ்வளவு முக்கியம் என்பது அனைவரும் தெரிந்திருக்கும். வயதான காலத்தில் எந்த வேலையும் செய்யாமல் வருமானம் ஈட்ட வேண்டுமானால், அதற்கு ஏற்ப பென்ஷன் திட்டம் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பலர் இதில் பெரிய தவறுகளைச் செய்கிறார்கள். வேலையில் இருக்கும்போது செய்யும் இந்தத் தவறுகள் ஓய்வுக்குப் பின் பெறும் வருமானத்தைப் பாதிக்கிறது. பலரும் அடிக்கடி செய்யும் இதுபோன்ற 5 தவறுகளைப் பற்றித் இத்தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
EPF-ஐ மிகவும் சார்ந்து இருப்பது
பல இளைஞர்கள் தாங்கள் EPF மூலம் சேமிக்கிறோம் என்று நினைக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் தங்கள் முதுமைக்காக எந்தத் தனித் திட்டத்தையும் எடுப்பதில்லை. EPF வட்டி விகிதம் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. அது தவிர தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போன்ற சில நல்ல திட்டங்கள் உள்ளன. எனவே EPF ஐ அதிகம் சார்ந்து இருக்காமல், பிற வழிகளிலும் முதலீடு செய்யலாம்.
வேலை மாறும்போது EPF ஐ மாற்றுதல்
பலர் வேலை மாறிய பிறகு, தங்கள் EPF பணத்தை பழைய நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றுவதில்லை. இதனால், வட்டியை இழக்க வேண்டியுள்ளது. எனவே வேலை மாறிய பிறகு கண்டிப்பாக பழைய நிறுவனத்தின் EPF பணத்தை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும்.
தாமதமாகச் சேமிக்கத் தொடங்குதல்
பெரும்பாலான இளைஞர்கள் வேலை கிடைத்தவுடன், ஓய்வுக்காக இப்போதே ஏன் பணத்தைச் சேமிக்க வேண்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாமே என்று நினைக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்யத் தொடங்குகிறீர்களோ, அந்த அளவுக்கு நல்லது. ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் வருமானம் அதைப் பொறுத்து அதிகரிக்கும். ஆரம்பத்தில் இருந்தே முதலீடு செய்வதன் மூலம், ஒவ்வொரு மாதமும் குறைந்த பணத்தை முதலீடு செய்தால் போதும். ஓய்வுக்குப் பிறகு அதிக வருமானத்தைப் பெறலாம்.
ஓய்வு பெறும் வயது
அதிகாரப்பூர்வமாக ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60. ஆனால், இந்தக் காலகட்டத்தில் பலர் மிகுந்த அழுத்தத்தின் கீழ் வேலை செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து பணியாற்றுவது கடினம். எனவே வேலை கிடைத்த உடனேயே ஓய்வூதியத் திட்டமிடலைத் தொடங்கினால், 60 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்று அவசியமில்லை. அதற்கு முன்பே ஓய்வு பெறலாம்.
பணவீக்கம்
ஓய்வூதியத்திற்காகச் சேமிக்கும் போது, அடுத்த 25-30 ஆண்டுகளில் ரூபாயின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று பலரும் யோசித்துப் பார்ப்பதில்லை. ஓய்வூதியத்திற்கு திட்டமிடும் போது, பணவீக்கத்தை புறக்கணித்து, தற்போதைய வட்டி விகிதங்கள் அடிப்படையில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் ஓய்வு பெறும்போது கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவாக இருக்கும். அப்போது, விலைவாசி உயர்ந்து அவர்களின் செலவுகளை சரியாக ஈடுகட்ட முடியாத பிரச்சினை ஏற்படும். எனவே தொலைநோக்குத் திட்டத்துடன் முதலீடு செய்யவேண்டும்.