டிஜிட்டல் தங்க முதலீடு ஆபத்தானது.. மக்களே எஸ்கேப் ஆயிடுங்க..செபி விடுத்த எச்சரிக்கை.!
டிஜிட்டல் தங்க முதலீடுகள் பிரபலமாகி வரும் நிலையில், பல ஆன்லைன் தளங்கள் செபியின் கட்டுப்பாட்டில் இல்லை என செபி எச்சரித்துள்ளது. இதனால், மோசடி ஏற்பட்டால் முதலீட்டாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்காது.

டிஜிட்டல் தங்க முதலீடு
டிஜிட்டல் தங்க முதலீடு தற்போது பலருக்கும் புதிய முதலீட்டு வழியாக மாறி வருகிறது. நகைகள், நாணயங்கள் அல்லது தங்க கட்டிகள் வாங்கும் பழக்கம் இருந்தாலும், இப்போது மக்கள் தங்கள் மொபைல் செயலிகள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் “டிஜிட்டல் தங்கம்” வாங்கும் வழியில் மாறியுள்ளனர். மிகச் சிறிய தொகையிலிருந்து தொடங்கலாம் என்பதால் இது மிகவும் வசதியாகத் தெரிகிறது. ஆனால், இந்த வசதியின் பின்னால் சில ஆபத்துகள் இருப்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும் என்று செபி (SEBI) தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
செபி எச்சரிக்கை
பல ஆன்லைன் தளங்கள் தற்போது “டிஜிட்டல் தங்கம்” அல்லது “இ-கோல்டு” முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் அவை செபியின் கட்டுப்பாட்டில் இல்லாததால், இவை ஒழுங்குபடுத்தப்படாத தயாரிப்புகளாகக் கருதப்படுகின்றன. இதனால், இந்த தளங்களில் முதலீடு செய்யும் போது ஏதேனும் மோசடி நடந்தால், செபி எந்த பாதுகாப்பும் அல்லது நஷ்ட ஈடு நடவடிக்கையும் எடுக்காது. டிஜிட்டல் தங்கம் என்பது செபியால் ஒழுங்குபடுத்தப்படும் கோல்டு ETF (Exchange Traded Fund) அல்லது எலக்ட்ரானிக் கோல்டு ரசீது (EGR) போல அல்ல.
டிஜிட்டல் தங்கம்
இது மின்னணு வடிவில் தங்கம் வாங்கும் வசதி. நீங்கள் உங்கள் மொபைல் மூலம் சில ரூபாயில் தங்கம் வாங்கலாம். சந்தை விலைக்கேற்ப விற்பனை செய்ய முடியும். பல தளங்கள் இதை மிகப் பெரிய விளம்பரமாக விளங்கினாலும், எல்லா தளங்களும் நம்பகமானவை அல்ல. ஏனெனில் அவை செபி கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, எதிர்காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், முதலீட்டாளர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு கிடையாது.
பாதுகாப்பான முதலீட்டு வழிகள்
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், செபி ஒழுங்குபடுத்தும் வழிகளைத் தேர்வு செய்யவும் செய்யலாம். அதாவது, கோல்டு ETF, எலக்ட்ரானிக் கோல்டு ரசீது (EGR), அல்லது எக்ஸ்சேஞ்ச்-டிரேடட் கமாடிட்டி டெரிவேடிவ் ஒப்பந்தங்கள் முதலீடு மூலம் செய்யலாம். இவை பாதுகாப்பானதும் நம்பகமானதும் ஆகும். தற்போது தனிஷ்க், MMTC-PAMP, கேரட்லென், ஃபோன்பே போன்ற பல பிராண்டுகள் “டிஜிட்டல் தங்கம்” வழங்கினாலும், அவற்றில் முதலீடு செய்வதற்கு முன் நிறுவனம் செபி அனுமதி பெற்றதா என்பதை சரிபார்க்க வேண்டும்.