இந்த பேங்கில் அக்கவுண்ட் இருக்கா? 5 வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைகளை மீறியதற்காக தெலங்கானா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அபராதம்
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் ஒருமுறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு கால இடைவெளியிலும் விதிமுறைகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் 5 கூட்டுறவு வங்கிகள் பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. இதற்குக் காரணமாக, வீட்டுவசதி நிதி ஒழுங்குமுறைகளை மீறுதல், KYC செயல்முறைகளில் பிழை, சைபர் பாதுகாப்பு குறைபாடு போன்ற பல தவறுகள் விசாரணையில் கண்டறியப்பட்டன.
இந்திய ரிசர்வ் வங்கி
இவற்றில் தெலங்கானா மாநில ஜக்தியால் பகுதியில் உள்ள காயத்ரி கூட்டுறவு அர்பன் வங்கிக்கு அதிகபட்ச அபராதமாக ரூ.10 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் காப்பீட்டு பொருட்களை விற்பனை செய்யும் போது தெளிவான தகவல்களை வழங்காமல் செயல்பட்டது முக்கிய குற்றச்சாட்டு ஆகும். இதுதவிர, குஜராத் மாநில வடோதராவில் உள்ள மாகர்புரா இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் கூட்டுறவு வங்கிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள தென் கன்னட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ரூ.1.5 லட்சம் அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டது.
அபராதம் விதிக்கப்பட்ட வங்கிகள்
காரணம், வீட்டுவசதி நிதியில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி முதலீடு செய்தது மற்றும் மற்றொரு கூட்டுறவு நிறுவன பங்குகளை வாங்கியது. இது வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்திற்கு நேரடி மீறலாகும். அதேபோல், ஆந்திர மாநில குண்டூர் மத்திய கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு சர்கில் தபால் கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குண்டூர் வங்கி KYC விவரங்கள் சரியான நேரத்தில் மையப் பதிவகத்தில் சேர்க்க தவறியது, தமிழ்நாடு வங்கி அனுமதி அளவை விட அதிக வட்டி விகிதத்தில் வைப்புகளை ஏற்றதும் காரணமாகும்.
கூட்டுறவு வங்கிகள்
இந்த அபராதம் வாடிக்கையாளர்களின் அன்றாட வங்கி பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. ஒழுங்குமுறைகளை மீறிய வங்கிகள் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதிப்படுத்த எதிர்காலத்திலும் தேவையானது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.