"Rapido" வின் உணவு டெலிவரி விலைகுறைப்பு! Zomato, Swiggy-க்கு கடும் போட்டி!
குறைந்த கட்டணத்தில் உணவு டெலிவரி சேவையை வழங்கி, Zomato, Swiggy போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக ராபிடோ களமிறங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகங்களுக்குக் குறைந்த கட்டணத்தில் சிறப்பான சேவையை வழங்கி சந்தையில் புரட்சியை ஏற்படுத்த முயற்சி

ராபிடோவின் புதிய யுத்தி
வாகனம் இல்லாதவர்களையும் எளிதாக பயணிக்க வைத்துவரும் ராபிடோ, தற்போது உணவு டெலிவரி துறையில் இறங்கி சக்கைபோடு போட்டு வருகிறது. இந்தியாவின் உணவு டெலிவரி சந்தையில் புதுமுகமாக வந்து, வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கும் ராபிடோ (Rapido) நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் உணவகங்களைக் கவரும் வகையில் தனது உணவு டெலிவரி கட்டணங்களை பெரிதும் குறைத்துள்ளது. இது, Zomato மற்றும் Swiggy போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளது.
போட்டிக்கு பதிலளிக்கும் ராபிடோ
ஆடித்தள்ளுபடி போல தற்போது அதிரடி கட்டணகுறைப்பு செய்துள்ளதால் கையேந்திபவன்கள் முதல் ஹோட்டல்கள் வரை எல்லா உணவு உற்பத்தி நிறுவனங்களும் ராபிடோ பின்னால் வரிசைகட்டி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது பல்வேறு உணவகங்கள் 16% முதல் 30% வரையிலான கமிஷன் கட்டணங்களை Zomato, Swiggy நிறுவனங்களுக்கு செலுத்தி வருகிறன. ஆனால், ராபிடோ இந்த கட்டணத்தை வெறும் 8% முதல் 15% வரை மட்டுமே நிர்ணயித்துள்ளது. இதனால் ஹோட்டல்களுக்கு ஆகும் செலவு பாதியாக குறைந்து வருமானம் அதிகரித்துள்ளதால் பல முன்னணி நிறுவனங்கள் ராபிடோ தேர்வு செய்துள்ளன.
வாடிக்கையாளர்களுக்கான புதிய சலுகை
ராபிடோ, உணவுக்கு குறைந்த விலையிலும், விரைவான டெலிவரியுடன், வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த தேர்வாக மாறி வருகிறது.
ரூ.400‑க்கும் குறைவான ஆர்டர்களுக்கு டெலிவரி கட்டணம்: ₹25
ரூ400‑க்கும் அதிகமான ஆர்டர்களுக்கு டெலிவரி கட்டணம்: ₹50
இந்த விலைகள், தற்போது சந்தையில் உள்ள மற்ற டெலிவரி சேவைகளை விட மிகக் குறைவு
சிறு உணவகங்களுக்கு சாதகமான மாற்றம்
இந்த கட்டண மாற்றம், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர உணவகங்களுக்கு பெரும் ஆதரவாக இருக்கும். சிறு உணவகங்களுக்கு இது ஒரு புதிய வாயிலாக அமையும் என தேசிய உணவக சங்கத்தின் (NRAI) உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிய அளவில் மெஸ் நடத்துபவர்களும், வீடுகளில் தரமான உணவுகளை தயாரிப்போரும் ராபிடோவின் கட்டண குறைப்பு தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சேவை எப்போது தொடங்குகிறது?
ராபிடோவின் இந்த புதிய டெலிவரி கட்டண அமைப்பு, முதற்கட்டமாக பெங்களூரு நகரத்தில் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாத தொடக்கத்தில் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் இந்த கட்டண குறைப்பை மேற்கொள்ள ராபிடோ திட்டமிட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வலுக்கும் போட்டி
இந்த மாற்றம் உணவகங்களுக்கு குறைந்த செலவில் அதிக வருமானத்தை தரக்கூடியதாக இருக்கும். மேலும், வாடிக்கையாளர்களும் குறைந்த விலையில் தரமான சேவையைப் பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால், Zomato மற்றும் Swiggy நிறுவனங்களுக்கு சந்தையில் வலுவான போட்டி உருவாகும். பொருளாதார சூழலில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், ராபிடோவின் இந்த புதிய முயற்சி உணவகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இது உணவு டெலிவரி துறையின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.