Post Office Schemes: அதிக லாபம் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள்
பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதிக லாபத்தைக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்கள் பல உள்ளன.
ரிஸ்க் இல்லாத முதலீடு
பணத்தை சரியான வகையில் முதலீடு செய்தால் அதன் மூலம் மிகச்சிறந்த பலனை ஈட்ட முடியும். நிரந்தர வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வது அதிக ஆபத்து இல்லாத முதலீடுகளில் ஒன்று. ஆனால், அதனைவிட போஸ்ட் ஆபீஸ் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது அதிக பலனைக் கொடுக்கும். தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் 5.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இத்தொகுப்பில் அஞ்சலகங்களில் உள்ள சிறந்த சேமிப்புத் திட்டங்கள் பற்றிப் பார்க்கலாம்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
இத்திட்டத்தின் கீழ் பத்து வயதுக்குக் குறைவான பெண் குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்கலாம். இதில் 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். குறைந்தபட்சமாக 250 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் வரிவிலக்கும் உண்டு. எனவே, வருமானவரி சட்டப் பிரிவு 80ஏ மேலும் வரிச்சலுகை பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
திட்டத்தில் 7.4 சதவீதம் ஆண்டு வட்டிக்கு கிடைப்பதற்கு உத்தரவாதம் உள்ளது. 60 வயது மேல் உள்ள அனைவரும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்க தகுதி உடையவர்கள். இத்திட்டத்தில் டெபாசிட் செய்யும்போது 1000, 2000, 3000 என்று ஆயிரக்கணக்கில்தான் டெபாசிட் செய்யமுடியும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்புநிதித் திட்டம்
இத்திட்டத்தில் இப்போது ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. குறைந்தபட்ச டெபாசிட் தொகை ரூ.500 ஆகவும் அதிகபட்ச டெபாசிட் தொகை ரூ.1.5 லட்சம் ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கு தொடங்கிய ஆண்டுக்கு அடுத்த 15 ஆண்டுகள் கழித்து இந்தக் கணக்கு முதிர்வு அடையும்.