Post Office: ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபீஸின் ஜாக்பாட் திட்டம்!
Post Office: தினமும் ரூ.50 சேமிப்பில் ரூ.35 லட்சம் வரை முதிர்வுத் தொகை தரும் கிராம் சுரக்ஷா யோஜனா எனும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கிராம் சுரக்ஷா யோஜனா
தினமும் வெறும் 50 ரூபாய்... முதிர்வில் சுமார் 35 லட்சம் ரூபாய்! கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆனால், இந்திய அஞ்சல் துறையின் ஒரு சிறப்புத் திட்டத்தில் இது சாத்தியம். அந்தத் திட்டத்தின் பெயர் தான் 'கிராம் சுரக்ஷா யோஜனா' பாதுகாப்பான முதலீட்டுக்கு பெயர் பெற்றது தபால் துறை. அந்த வகையில், சேமிப்புடன் சேர்த்து ஆயுள் காப்பீட்டுப் பாதுகாப்பையும் வழங்கும் இந்தத் திட்டம், கிராமப்புற மக்களுக்காகவே பிரத்யேகமாக 1995-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தபால் துறையின் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் (RPLI) ஒரு பகுதியாகும்.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்?
இந்தத் திட்டத்தில் 19 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இணையலாம். பாலிசிக்கான காப்பீட்டுத் தொகையை குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை தேர்வு செய்துகொள்ள முடியும். இது முதலீட்டாளரின் நிதி நிலைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.
பிரீமியம் தொகையை மாதாந்திரம், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுக்கு ஒருமுறை என வசதிக்கேற்ப செலுத்தலாம். ஒருவேளை பிரீமியம் செலுத்தத் தவறினால், அபராதம் இன்றிச் செலுத்த 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்படுகிறது. இது பாலிசிதாரர்களுக்கு ஒரு பெரிய சௌகரியம்.
ரூ.35 லட்சம் பெறுவது எப்படி?
ஒருவர் இந்தத் திட்டத்தில் மாதத்திற்கு ரூ.1,500, அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.50 முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் வரை பெறலாம் என ஒரு கணக்கீடு கூறுகிறது. உதாரணமாக, 55 வயதில் முதிர்வடைந்தால் சுமார் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் ரூ.34.60 லட்சமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய ஈர்ப்பே ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் போனஸ் தான். சமீபத்திய அறிவிப்பின்படி, காப்பீட்டுத் தொகையில் ஒவ்வொரு ரூ.1,000-க்கும் ஆண்டுக்கு ரூ.60 போனஸாக வழங்கப்படுகிறது. இது உங்கள் சேமிப்பை கணிசமாக உயர்த்த உதவுகிறது.
பிற முக்கிய அம்சங்கள்
பாலிசி தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, அதன் மீது கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது. பாலிசி காலத்தில் பாலிசிதாரர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தால், காப்பீட்டுத் தொகை முழுவதுமாக அவரது சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கப்படும். இதனால், உங்கள் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது.
ஒருவேளை பாலிசியைத் தொடர முடியாவிட்டால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதை சரண்டர் செய்யும் வசதியும் உண்டு. ஆனால், அப்படிச் செய்தால் முழுமையான பலன்கள் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ள முதிர்வுத் தொகை என்பது ஒரு உதாரணக் கணக்கீடு மட்டுமே; இது வயது, காப்பீட்டுத் தொகை மற்றும் போனஸ் விகிதத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே, முதலீடு செய்வதற்கு முன் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகி முழு விவரங்களையும் உறுதி செய்துகொள்வது நல்லது.
வருமான வரி விலக்கு
நீங்கள் செலுத்தும் பிரீமியம் தொாகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெற முடியும். மேலும், முதிர்வுத் தொகைகக்கும் பிரிவு 10(10D)-ன் கீழ் வரி விலக்கு உண்டு. நீங்கள் இந்தியாவில் எந்த ஊருக்கு இடம்பெயர்ந்தாலும், உங்கள் பாலிசியை நாட்டின் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திற்கும் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

