- Home
- Business
- விஸ்கி, சாக்லேட், கார்கள் விலை குறையுது... நாளை முதல் அமல்.. இந்தியா - பிரிட்டன் மெகா டீல்!
விஸ்கி, சாக்லேட், கார்கள் விலை குறையுது... நாளை முதல் அமல்.. இந்தியா - பிரிட்டன் மெகா டீல்!
India-UK Trade Deal: இந்தியா, இங்கிலாந்து இடையே போடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் காரணமாக விஸ்கி, சாக்லேட் மற்றும் கார்களின் விலை குறைய உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

விஸ்கி, சாக்கலெட், கார்கள் விலை குறையும்
பிரிட்டனிலிருந்து வரும் ஸ்காட்ச் விஸ்கி, ஜின், சாக்லேட், பிஸ்கட், கார்கள், காஸ்மெட்டிக்ஸ் பொருட்களுக்கெல்லாம் இனிமேல் இந்தியாவில் விலை குறையப் போகிறது. இந்தியா, இங்கிலாந்து இடையே கையெழுத்தான விரிவான பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் (Comprehensive Economic Trade Agreement) நாளை முதல் அமலுக்கு வருவதுதான் இதற்குக் காரணம். மறுபுறம், இந்தியப் பொருட்களுக்கு வரி இல்லாமல் பிரிட்டிஷ் சந்தையில் நுழையவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, 2025 ஜூலை 24-ம் தேதிதான் இந்தியாவும் யூகேவும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்தியா, இங்கிலாந்து இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதால், பிரிட்டிஷ் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஜின் மீதான இறக்குமதி வரி 150 சதவீதத்திலிருந்து ஒரேயடியாக 75 சதவீதமாகக் குறையும். அடுத்த 10 ஆண்டுகளில் இது 40 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது. கார் பிரியர்களுக்கும் ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது 110 சதவீதம் வரை இறக்குமதி வரி உள்ள பிரிட்டிஷ் கார்களின் வரி, அடுத்த 10 ஆண்டுகளில் 10 சதவீதமாகக் குறையும். ஆனால், இந்தியாவின் எலக்ட்ரிக் வாகனச் சந்தையைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எலக்ட்ரிக்-ஹைப்ரிட் வாகனங்களின் இறக்குமதிக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாக்லேட்கள், பிஸ்கட்கள், குளிர்பானங்கள் போன்றவற்றுக்கும் விலை குறையும்.
இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் ஜாக்பாட்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்பவர்களுக்கு பிரிட்டிஷ் சந்தையில் ஒரு பெரிய முன்னேற்றத்தை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தும். 99 சதவீத இந்தியப் பொருட்களுக்கு வரி இல்லாமல் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யலாம். ஜவுளி, கடல்சார் பொருட்கள், தோல், காலணிகள், விளையாட்டு உபகரணங்கள், பொம்மைகள், நகைகள் ஆகிய துறைகளுக்கு இதன் மிகப்பெரிய பலன் கிடைக்கும். இதுதவிர, இன்ஜினீயரிங் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், ஆர்கானிக் கெமிக்கல்கள் ஆகியவற்றுக்கும் பெரிய சந்தை கிடைக்கும்.
ஐடி துறையில் உள்ளவர்களுக்கு நிம்மதி
யூகே-வில் பணிபுரியும் இந்தியப் புரொஃபஷனல்களுக்கு (குறிப்பாக ஐடி துறையில் உள்ளவர்களுக்கு) இந்த ஒப்பந்தம் ஒரு பெரிய நிம்மதியைக் கொடுத்துள்ளது. 'டபுள் கான்ட்ரிபியூஷன் கன்வென்ஷன்' (Double Contribution Convention) ஜூலை 15 முதல் அமலுக்கு வரும். இதனால், பிரிட்டனின் சமூகப் பாதுகாப்புக்கு (Social Security) இந்தியர்கள் செலுத்தி வந்த தொகை இனி தேவையில்லை. அதற்குப் பதிலாக, அந்தத் தொகையை இந்தியாவில் உள்ள பி.எஃப். கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம், வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் தங்கள் சம்பளத்தில் 25 சதவீதம் வரை சேமிக்கவும், அதற்கு வட்டி பெறவும் முடியும்.
விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை
இந்திய விவசாயிகள் மற்றும் சிறு பால் உற்பத்தியாளர்களைப் பாதிக்காத வகையில், பால் பொருட்கள், ஆப்பிள், சீஸ், சர்க்கரை, அரிசி, பன்றி இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை போன்றவை இறக்குமதி வரி விலக்கிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.2025-26ஆம் ஆண்டு கணக்குப்படி, இந்தியா-யூகே வர்த்தகம் 25.13 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது (2024-25ல் இது 23.13 பில்லியன் டாலராக இருந்தது). இந்தியாவின் ஏற்றுமதி 13.44 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 11.68 பில்லியன் டாலராகவும் உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அடுத்த பத்து ஆண்டுகளில் யூகே-விலிருந்து ஏற்றுமதி செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 900 மில்லியன் பவுண்ட் வரி லாபம் கிடைக்கும். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்பவர்களுக்கு 220 மில்லியன் பவுண்ட் லாபம் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. 2040ஆம் ஆண்டுக்குள் பிரிட்டனிலிருந்து ஏற்றுமதியில் 60 சதவீதமும், இந்தியாவிலிருந்து இறக்குமதியில் 25 சதவீதமும் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இது யூகே-வின் ஜிடிபியில் 0.13 சதவீத வளர்ச்சியை ஏற்படுத்தும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

