மின்கட்டணத்தை குறைக்க "ஈசி" வழி - "AC"யை இப்படி பயன்படுத்த வேண்டும்!
ஏசி பயன்படுத்துவோர் 24 டிகிரி செல்சியஸ் வைத்தால் மின் கட்டணம் அதிகரிப்பை தடுக்கலாம். ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும் 6 சதவீதம் மின்சார உபயோகத்தை குறைக்க முடியும்.

ஏசியால் உயரும் மின்கட்டணம் - குறைக்கும் வழிகள்
வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்ததாக தெரியவில்லை. வெளியே சென்று வீட்டுக்கு வந்தால் "எப்படா" ஏசிக்கு கீழே உக்காருவோம் என்ற தோன்றுகிறது. தேவைப்படும் போதெல்லாம் ஏசி போட்டு ஓய்வெடுக்கும் நம்மால் அதற்கு பில் கட்டும்போது "அப்பாடா" என மூச்சு வாங்கும் நிலையே ஏற்படுகிறது. ஏசியை பயன்படுத்துவோர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தால் கூட மின்சாரக்கட்டணத்தை குறைக்க முடியாத நிலையே உள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்தும் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.
ஏசி உபயோகமும் வெப்பநிலையும்
அலுவலகங்கள் மற்றும் அலுவலகங்கலில் ஏ.சி பயன்படுத்துவோர் 24 டிகிரி செல்சியஸ் வைத்தால், இந்த கோடையில் மின் கட்டணம் அதிகரிப்பை தடுக்க முடியும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகமான பிஇஇ தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பலரும் தங்கள் ஏ.சியி.யில் வெப்ப நிலை அளவை 20 முதல் 21 டிகிரி செல்சியஸில் வைக்கின்றனர். அதனை 24 டிகிரியில் வைத்தால் மின்சாரம் உபயோகம் குறைந்து மின் கட்டணம் வெகுவாக குறையும் என எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
கட்டணம் அதிகரிக்க இதுவே காரணம்
ஏ.சியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும்போதும், நம்மால் 6 சதவீதம் மின்சார உபயோகத்தை குறைக்க முடியும் என்றும் ஏ.சி.யில் 24 டிகிரி முதல் 25 டிகிரி வெப்பநிலை வைத்தாலே, வீடு மற்றும் அலுவலக அறைகள் குளிர்ச்சியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ள எரிசக்தி திறன் மேம்பாட்டு அலுவலகம் வெப்பநிலை அளவை குறைக்க, குறைக்க மின்சார உபயோகம் அதிகரிக்கும் என கூறியுள்ளது.
ரூ.5 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தலாம்
நம்நாட்டில் ஏ.சி. பயன்படுத்துவோரில் 50 சதவீதம் பேர் 24 டிகிரி செல்லியஸ் என்ற அளவை பின்பற்றினால், ஆண்டுக்கு 1000 கோடி யூனிட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது இது ரூ.5,000 கோடி அளவுக்கு சேமிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆண்டுக்கு 8.2 மில்லியன் டன் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தையும் குறைக்கும். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது வெகுவாக குறையும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவி்ததுள்ளனர்.
"டைமர்" இருக்க கவலை ஏன்?
தூங்குவதற்கு முன்பு ஏசியின் டைமரை ஆன் செய்துவிட்டு அது ஆட்டோமேட்டிக்காக 1 அல்லது 2 மணி நேரத்திற்கு பிறகு ஆஃப் ஆவதை நீங்கள் உறுதி செய்யலாம். இவ்வாறு நீங்கள் செய்யும்பொழுது இரவு நேரத்தில் மின்சார பயன்பாடு குறையும்.எப்பொழுதும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடியிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏசியின் செயல் திறனை பராமரிப்பதற்கு குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியே செல்லாதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இதனால் அதிக மின்சாரம் செலவாகலாம்.