ரயில் லேட் ஆனா இதெல்லாம் கிடைக்குமா.? இத்தனை நாள் இது தெரியாம போச்சு
இந்திய ரயில்வேயில் ரயில் தாமதமாகும் போது பயணிகளுக்கு சில முக்கிய வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்த வசதிகள் பயணிகளின் சிரமத்தைக் குறைக்க உதவுகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

பயணத்திற்குத் தயாராகி ரயில் நிலையத்திற்குச் சென்றபின், ரயில் தாமதமாகும் செய்தி தெரியவருவது பலருக்கும் சலிப்பையும், சோர்வையும் ஏற்படுத்தும். அறிவிப்புகளை கவனிப்பது, டிஸ்ப்ளே போர்டுகளை மீண்டும் பார்ப்பது, கடிகாரத்தை கண்காணிப்பது எனக் காத்திருப்பு நீளம் தான். ஆனால், ரயில் தாமதம் காரணமாக இந்த சிரமத்தை குறைக்கும் வகையில் இந்திய ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி பயணிகளுக்கு சில முக்கிய வசதிகள் வழங்கப்படுகின்றன.
ஐஆர்சிடிசி கேட்டரிங் கொள்கைப்படி, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, திட்டமிட்டபடி ரயில் 2 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தாமதமானால் இலவச உணவு வழங்கப்படுகிறது. தாமதமாகும் நேரத்தை பொறுத்து காலை, மதியம் அல்லது இரவு உணவு வழங்கப்படும். இந்த நடைமுறை தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
ஜனவரி 8ஆம் தேதி, ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த ஒரு பயணி, தனது ரயில் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால் இலவச மதிய உணவு வழங்கப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் உணவின் புகைப்படத்தையும் பகிர்ந்த அவர், இந்த வசதி பிரீமியம் ரயில்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதையும் குறிப்பிட்டார். இந்த பல பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இதுமட்டுமின்றி, ரயில் 3 மணி நேரத்திற்கு மேலாக தாமதமானால், பயணிகள் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்து முழு பணத்தையும் திரும்பப் பெறும் வசதியும் உள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட அதே தளத்தின் மூலம் ரீஃபண்ட் வழங்கப்படும். மேலும், கூடுதல் கட்டணம் இன்றி காத்திருப்பு அறைகளைப் பயன்படுத்தலாம். இரவு நேர தாமதங்களில், உணவு கவுண்டர்கள் வழக்கத்தை விட நீண்ட நேரம் திறந்திருக்கும். இந்த வசதிகள், ரயில் தாமதம் நேரிடும் போது பயணிகளுக்கு சிறிய நிம்மதி அளிக்கின்றன என்றே கூறலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

